ஈரான் பெரிய விலை தரவேண்டியிருக்கிறது” - இஸ்ரேல் பிரதமர் 
                  
                     20 Oct,2024
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	தம்மையும் தனது மனைவியையும் ஈரான் கொல்ல முயன்றதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ குற்றஞ்சாட்டியுள்ளார்.
	 
	 
	இஸ்ரேல் பிரதமரை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
	 
	இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், வடக்கு இஸ்ரேலில் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
	 
	இஸ்ரேல் படைகளால் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
	 
	இந்த நிலையில், இஸ்ரேலின் கடற்கரையோர நகரமான சிசேரியா (Caesarea) பகுதியில் உள்ள பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்தின் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு டிரோன் நெதன்யாகுவின் இல்லத்தின் மீது விழுந்து வெடித்து விபத்துக்குள்ளானது.
	 
	 
	இந்த தாக்குதலின்போது பிரதமர் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் வீட்டில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. டிரோன் தாக்குதலை உறுதி செய்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை என்று கூறியுள்ளது. மேலும், இரண்டு டிரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியதாகவும் கூறியுள்ளது.
	 
	இதனிடையே துறைமுக நகரமான அக்ரேவில் ஹிஸ்புல்லா நடத்திய ராக்கெட் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், 9 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
	 
	இதையடுத்து, தம்மையும் தனது மனைவியையும் ஈரான் கொல்ல முயன்றதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு குற்றஞ்சாட்டியுள்ளார்.
	 
	 
	டிரோன் தாக்குதல் குறித்து பேட்டியளித்துள்ள பெஞ்சமின் நெதன்யாஹு, “இந்த தாக்குதலுக்கு ஈரான் பெரிய விலை தரவேண்டியிருக்கிறது” என்றும் கூறியுள்ளார். மேலும் இஸ்ரேல் குடிமக்களை தாக்க முற்பட்டால் மிகப்பெரிய விலையை எதிரிகள் தரவேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
	 
	இதனிடையே காசாவில் ஹமாஸ் பிரிவினர் பிணையக் கைதிகளாக பிடித்துச்சென்ற தங்கள் உறவினர்களை மீட்டுக் கொண்டுவரக்கோரி, பொதுமக்கள் டெல் அவிவ் நகரில் பிரமாண்ட பேரணி நடத்தினர்.