அமெரிக்காவில் போயிங் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம்..!!
17 Oct,2024
ஊதிய உயர்வு அளிக்க கோரியும், ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் போயிங் நிறுவன ஊழியர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போயிங் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற கெல்லி ஏர் பிரேக் செலவினங்களை குறைக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வந்தார். இதில் 17 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையும் அடக்கம்.
இந்நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும், ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்தும் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போயிங் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் ஒரு மாதமாக தொடரும் நிலையில் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் நகரத்தில் அவர்கள் பேரணியாக சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர்.
பல ஆண்டுகளாக போயிங் நிறுவனம் தங்களது ஊதியத்தை உயர்த்தவில்லை என்று குற்றம்சாட்டும் ஊழியர்கள் குறைந்தது 40 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில் போயிங் விமான உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.