மத்திய கிழக்கில் சமீப நாட்களாக எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதல் நிஜமாகியுள்ளது. இஸ்ரேல் மீது இரான் சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலுக்கு முன்பே எச்சரித்திருந்த அமெரிக்கா, இரானின் ஏவுகணைகளை வழியிலேயே இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு உதவி புரிந்ததாக கூறியுள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட படியே இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் இனி என்ன செய்யப் போகிறது? மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க ராணுவம் என்ன செய்கிறது? மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரிக்கும் பதற்றம் உலகளாவிய அளவில், குறிப்பாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
3 மணி நேரங்களுக்கு முன்னர்
பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதை இரான் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பதில் தாக்குதலில் ஈடுபட்டால் மேலும் தாக்குதல் தொடுப்போம் என்று இரான் மிரட்டல் விடுத்துள்ளது. இது இரான் புரட்சிகர காவல் படையின் முதல் தாக்குதல் என்று இரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கமிட்டி தலைவர் இப்ராகிம் அஸிஸி தெரிவித்துள்ளார்.
"இஸ்ரேலின் ராணுவ மையங்கள் மற்றும் தளவாடங்களே எங்கள் இலக்காக இருந்தன. கணிப்புகள் ஒருவேளை தவறானால் பொதுமக்களும் கூட பாதிப்புகளை சந்திக்கும் நிலையும் வரலாம். இஸ்ரேல் மீண்டும் தவறிழைத்தால் அடுத்தக்கட்டமாக இரண்டாவதாக நடத்தப்படும் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
இஸ்ரேலை தாக்க இரான் எந்தவிதமான ஏவுகணைகளை பயன்படுத்தியது என்பது இன்னும் தெளிவாகவில்லை. அந்த ஏவுகணைகள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை அறிந்து கொள்ள ராணுவ நிபுணர்களிடம் பிபிசி வெரிஃபை குழு பேசியது.
ஆயுத ஆராய்ச்சி சேவை என்ற புலனாய்வு கன்சல்டன்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளரான பேட்ரிக் சென்ஃப்ட் இதுகுறித்து பிபிசி வெரிஃபையிடம் பேசினார். ஏவுகணை சிதைவுகளை பார்க்கையில், இரான் இந்த தாக்குதலுக்கு பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தியிருப்பது போல் தெரிகிறது என்று அவர் கூறினார்.
குரூயிஸ் ஏவுகணைகளைக் காட்டிலும் பேலிஸ்டிக் ஏவுகணைகளை இலக்கை மிக வேகமாக தாக்கக் கூடியவை என்றார் அவர்.
இரான் பயன்படுத்திய பேலிஸ்டிக் ஏவுகணைகள் தான் என்று ஏவுகணை பாதுகாப்புத் திட்ட இயக்குநர் தாமஸ் கராகோவும் கூறியுள்ளார்.
இரான் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி செலுத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜேக் சுல்லிவன், இரானின் தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக கூறினார். இஸ்ரேலிய விமானங்களுக்கோ, முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ உடைமைகளுக்கோ சேதம் ஏதும் ஏற்படாத வகையில், இரானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டு விட்டதாக தோன்றுவதாகவும் அவர் கூறினார்.
இஸ்ரேலை நோக்கி இரான் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தியதாகவும், அவற்றை வழியிலேயே இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்க கடற்படை உறுதுணையாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகக் கூறிய அவர், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் அவர்கள் தெரிந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேலுடன் ஆலோசித்து வருவதாகக் கூறிய அவர், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க குடிமக்களை உடனே வெளியேறுமாறு தங்கள் நாடு எந்தவொரு அறிவுறுத்தல்களையும் விடுக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.
இரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் அல்லது அமெரிக்கா தரப்பில் பதிலடி தரப்படுமா என்ற கேள்விக்கு சுல்லிவன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
பேலிஸ்டிக் ஏவுகணை பயன்பாட்டை ஒப்பிடுகையில், கடந்த ஏப்ரலில் இரான் நடத்திய தாக்குதலைப் போல இது இரு மடங்கு அதிகம் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேஜர் ஜெனரல் பேட்ரிக் ரைடர், இரானின் ஏவுகணைகளை வழியிலேயே தாக்கி அழிக்கும் பொருட்டு அமெரிக்காவின் 2 நாசகாரி கப்பல்கள் சுமார் ஒரு டஜன் ஏவுகணைகளை செலுத்தியதாக கூறினார்.
இஸ்ரேலின் உறுதிப்பாட்டை இரான் புரிந்து கொள்ளவில்லை" என்றார்
இரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாகவும், அதற்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இரான் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய அமைச்சரவை கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் இஸ்ரேலின் உறுதிப்பாட்டை இரான் புரிந்து கொள்ளவில்லை" என்றார்.
"இரான் அதனை புரிந்து கொள்ளும். எங்களை யார் தாக்கினாலும் நாங்கள் திருப்பித் தாக்குவோம். நாங்களே வகுத்துக் கொண்ட அந்த விதிகளின் கீழ் செயல்பட நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்ரேலிய விமானப்படை இன்றிரவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வலுவான தாக்குதலை முன்னெடுக்கும் என்று இஸ்ரேல் ராணுவத்தின் செயதி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரித்துளளார்.
இரான் செலுத்திய ஏவுகணைகளை தடுப்பதில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக செயல்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
"இரானின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. இன்றிரவு இரான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சரியான தொடர் விளைவுகள் இருக்கும்" என்றார் அவர்.
இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 74.40 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் நடுவே கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்தது.
அமெரிக்காவின் ஆற்றல் தகவல் ஆணைய தரவுகளின்படி, உலகின் ஏழாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக இரான் உள்ளது. ஓபெக் எனப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராகவும் இரான் இருக்கிறது.
அந்த பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இரான் அருகேயுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியே எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து தடைபடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஓமன் - இரான் இடையே உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியே உலக வர்த்தகத்தில் 25 சதவீத கச்சா எண்ணெய் சப்ளையாகிறது.
ஓபெக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், இராக் ஆகிய நாடுகளும் கூட ஹோர்முஸ் நீரிணை வழியேதான் கச்சா எண்ணெயை உலக சந்தைக்கு கொண்டு வருகின்றன.