மீண்டும் கொலை முயற்சி; டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
19 Sep,2024
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரப்புரை செய்யவிருந்த இடத்திற்கு அருகில் இருந்த காரில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டிரம்பும், தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த பரப்புரையில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது இருமுறை துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நியூயோர்க்கில் யூனியண்டாலே என்ற இடத்தில் டொனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்யவுள்ள நிலையில், அங்கிருந்த வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் அவர் மீது நடந்த அந்த கொலை முயற்சிக்கு கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோரது பேச்சுக்களே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.