நிலநடுக்கங்களால் அதிர்ந்துபோயுள்ள ஜப்பான் மக்கள்
12 Aug,2024
தொடர் நிலநடுக்கங்களால் ஜப்பான் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். இதனால், பொதுமக்கள் பேரழிவு ஏற்பட்டால் தேவைப்படக்கூடிய பொருள்களையும் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களையும் வாங்கிக் குவிப்பதில் மும்முரம் காட்டிவருகிறார்கள்.
தெற்கு ஜப்பானில் ஆகஸ்ட் 8 ஆம் திகதி ரிக்டர் அளவில் 7.1ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 14 பேர் காயமடைந்தனர். இதனால், வரும் நாட்களில் பெரிய அளவிலான நிலநடுக்கம் வரக்கூடும் என அந்நாட்டு பருவநிலை முகவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், டோக்கியோ பேரங்காடி ஒன்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் சில குறைவாக இருப்பதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. அதற்குக் காரணம் நிலநடுக்கம் தொடர்பாக ஊடகங்களில் வரும் தகவல்களே என்றும் அது விளக்கமளித்தது.
இனி வரும் நாட்களில் விற்பனையில் கட்டுப்பாடுகள் வரவுள்ளதாக அது தெரிவித்தது. இதில் ஒரு பகுதியாக, கொள்முதல் பிரச்சினை நிலவுவதால், ஒரு வாடிக்கையாளருக்கு ஆறு என்ற விகிதத்தில் மட்டுமே குடிநீர்ப் போத்தல்கள் விற்கப்படுவதாகவும் அது கூறியது.
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், குடிநீர்ப் போத்தல்களே அதிகம் கேட்டு வாங்கப்படும் பொருள்கள் என ஜப்பானின் மிகப் பெரிய மின்வர்த்தக இணையத்தளமொன்று தகவல் தெரிவித்தது.