கமலா ஹாரீஸ் கறுப்பினத்தவரா, இந்தியரா? டிரம்பின் இன ரீதியான பேச்சால் சர்ச்சை
02 Aug,2024
அமெரிக்க அதிபர் தேர்தல், வரும் நவம்பரில் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரீஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் டிரம்புக்கு தேர்தலில் கடும் போட்டியை கொடுப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்க தந்தைக்கும், இந்திய தாய்க்கும் பிறந்தவர் கமலா ஹாரீஸ்.
இந்த நிலையில்,சிகாகோவில் நடந்த கறுப்பின பத்திரிகையாளர் சங்கத்தின் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசுகையில்,‘‘ கமலா ஹாரீஸ் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். தற்போது அவர் தன்னை கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தி வருகிறார். இதனால், அவர் இந்தியரா? கறுப்பரா? என்பது தெரியவில்லை. தற்போது கமலா ஹாரிஸ் வெளிப்படையாக இல்லை’’ எனக் குறிப்பிட்டார். அப்போது ஒரு நிருபர்,கமலா ஹாரீஸ் எப்பொழுதுமே தன்னை கறுப்பினத்தவராக தான் அடையாளப்படுத்தி வந்தார் என்றார்.
அதற்கு டிரம்ப், ‘‘ அவர்களை நான் மதிக்கிறேன். ஆனால்,அவர் அப்படி நடந்து கொள்ளவில்லை. அவர் தன்னை இந்தியர் என்று தான் கூறினார்.பின்னர் திடீரென கறுப்பினத்தவராக அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். இந்த விஷயம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்’’ என்றார். டிரம்பின் இன ரீதியான பேச்சுக்கு அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஜீன் பியர் கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்பின் பேச்சு பற்றி கமலா ஹாரீஸ் கருத்து தெரிவிக்கவில்லை .