"டிரம்ப் குற்றவாளி" - நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பைடன் விமர்சனம்!
30 Jun,2024
அமெரிக்கா தகுதியான தலைவரை பெற்றிருந்தால், உக்ரைன் போர் தொடங்கியிருக்காது - டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.
அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சி நடத்தும் விவாத நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர். இந்த விவாதத்தில் வாக்காளர்களை கவரும் வகையில் செயல் திட்டங்கள், அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. எனவே, இந்த விவாத நிகழ்ச்சியை அமெரிக்க வாக்காளர்கள் மட்டுமின்றி, உலக நாடுகளும் உற்று கவனித்து வந்தன.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், “கொரோனா போன்ற நெருக்கடி நேரத்திலும் எந்த பிரச்சனையில் இன்றி சிறப்பாக ஆட்சி நடத்தினேன். மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் சுகாதாரத்திற்காக அதிக அளவில் எனது ஆட்சியில் செலவிடப்பட்டது. அமெரிக்கா தகுதியான தலைவரை பெற்றிருந்தால், உக்ரைன் போர் தொடங்கியிருக்காது.
விளம்பரம்
ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் போன்றவற்றுக்கு பைடன் அரசே காரணம். பைடன் அரசு கொண்டு வந்த வரிச்சலுகை திட்டம் சரியானதா? அமெரிக்காவின் ஜனநாயகம், பொருளாதாரத்தை பைடன் அரசு சீரழித்து விட்டது” என குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அதிபர் ஜோ பைடன், “முன்னாள் அதிபர் டிரம்ப் ஆட்சியில் அமெரிக்க மக்கள் வேலைவாய்ப்பின்றி தவித்தனர். டொனால்ட் டிரம்ப் பணக்காரர்களுக்காகவே ஆட்சி நடத்தினார். டிரம்ப் ஆட்சியில் வசதி படைத்தவர்களுக்கு சாதகமாகவே கொள்கைகள் வகுக்கப்பட்டன.
ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல் உடனான தொடர்பை மறைக்க டிரம்ப் பணம் கொடுத்த விவகாரத்தில் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து விட்டது. முன்னாள் அதிபர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது இதுவே முதன்முறை அவரைப் பார்த்துதான் பேசிக் கொண்டிருக்கிறேன்” என்று அவர் சாடினார்.
இந்த விவாத நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்ட நிலையில், விவாதத்தில் யார் வெற்றிபெற்றது என டிவியில் நேரலையில் பார்த்தவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 67% டிரம்ப் வெற்றிபெற்றதாகவும், 33% பேர் பைடன் வெற்றிபெற்றதாகவும் வாக்களித்தனர்.