உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் G7 மாநாடு இத்தாலியில் நேற்று (13) ஆரம்பமானது.
வளா்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் G7 கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்றன.
இந்நிலையில், இந்த 7 நாடுகளினதும் தலைவர்கள் பங்கேற்கும் 50 ஆவது மாநாடு இத்தாலியின் அபுலியா மாகாணத்தில் உள்ள பசானோ நகரில் நேற்று ஆரம்பமானது.
இத்தாலி பிரதமா் Giorgia Meloni இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்குகிறாா்.
இது தவிர, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், ஜொ்மனி பிரதமா் Olaf Scholz, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மெக்ரோன், ஜப்பான் பிரதமா் Fumio Kishida, கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்கின்றனா்.
G7 அமைப்பின் ‘எண்ணிக்கையில் சோ்க்கப்படாத’ உறுப்பினராகத் திகழும் ஐரோப்பிய ஒன்றியம் சாா்பில் ஐரோப்பிய ஆணையத் தலைவா் Ursula von der Leyen, ஐரோப்பிய கவுன்சில் தலைவா் சாா்லஸ் மிஷெல் ஆகியோா் மாநாட்டில் பங்கேற்கின்றனா்.
மாநாட்டின் சிறப்பு அழைப்பாளா்களாக இந்திய பிரதமா் நரேந்திர மோடி, உக்ரைன் அதிபா் Volodymyr Zelenskyy, துருக்கி அதிபா் எா்டோகன் உள்ளிட்ட 11 நாடுகளின் தலைவா்களும் போப்பாண்டவர் பிரான்சிஸூம் கலந்துகொள்கின்றனா்.
ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் (Antந்nio Guterres), உலக வங்கி தலைவா் Ajay Banga, சா்வதேச நிதியத் தலைவா் Kristalina Georgieva உள்ளிட்ட சா்வதேச அமைப்புகளின் தலைவா்களும் இந்த மாநாட்டில் விருந்தினா்களாக கலந்துகொள்கின்றனா்.
எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் காஸா போா், உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் இலாபத்தைக் கொண்டு உக்ரைனுக்கு 5,000 கோடி டொலா் கடனுதவி அளிக்க G7 மாநாட்டின் முதல் நாளில் உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அதன் நான்கு பிரதேசங்களின் கணிசமான பகுதிகளை கைப்பற்றியுள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு ஆயுத மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன.
இருந்தாலும், தத்தமது நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக உக்ரைனுக்கு தொடா்ந்து நிதியளிப்பதில் அந்த நாடுகள் பின்னடைவைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்கள் நாடுகளில் முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாயை உக்ரைனுக்கு அளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள் நீண்ட காலமாகவே கூறிவந்தனா்.
ஆனால், ஐரோப்பிய நாடுகளில் தாங்கள் செய்துள்ள முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, தங்கள் மீதே தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பது திருட்டுச் செயலுக்கு சமம் என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்து வருகிறது.
அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சொத்துகளை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு ஏற்ற இடம் என்ற பெயரை ஐரோப்பிய நாடுகள் இழந்துவிடும். அது, அந்த நாடுகளின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.
எனினும், முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு உக்ரைனுக்கு நிதியுதவி அளிக்க G7 தலைவா்கள் தற்போது இணங்கியுள்ளனர்.