ஏமன் அருகே வணிக கப்பல் மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல், ஹவுதி கிளர்ச்சியாளர்கள்?
29 May,2024
ஏமனில் இன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் வணிக கப்பல் சேதமடைந்ததாக கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.
ஏமன் துறைமுகமான ஹொடெய்டாவில் இருந்து தென்மேற்கில் 54 நாட்டிகல் மைல் தொலைவில் ஒரு வணிக கப்பல் மீது அடுத்தடுத்து 3 ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன் காரணமாக அந்த கப்பலில் சேதம் ஏற்பட்டு கப்பல் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே தகவல் வெளியிட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட கப்பலில் இருந்து ஆபத்து உதவி கோரி அழைப்பு வரப்பெற்றதாகவும், தாக்குதலுக்குப் பிறகு அந்த கப்பலுக்குள் கடல்நீர் உட்புகுந்து ஒருபுறமாக சாய்ந்து வருவதாகவும் தகவல்கள் வரப்பெற்றுள்ளதாக ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.
எனினும் தாக்குதலுக்குள்ளான கப்பலை அடையாளம் காணவோ, அதில் எத்தனை பணியாளர்கள் உள்ளனர் என்ற தகவலையோ ஆம்ப்ரே தெரிவிக்கவில்லை.
ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களால் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல் போக்குவரத்துக்கு எதிராக ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
எனினும் தற்போதைய வணிக கப்பல் மீதான தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை தவிர்ப்பதற்காக, சில கப்பல் நிறுவனங்கள் செங்கடல் வழியாக செல்லாமல் தென்னாப்பிரிக்காவைச் சுற்றிச் செல்கின்றன. செங்கடல் வழியான கப்பல் போக்குவரத்து உலகளாவிய வர்த்தகத்தில் 12 சதவீதத்தை கொண்டு செல்லும் ஒரு முக்கிய பாதையாகும்.
கடந்த ஜனவரி மாதம் முதல், கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகள் மீது அமெரிக்காவும், பிரிட்டனும் பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. எனினும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இந்த தாக்குதல் முழுமையாக கட்டுப்படுத்தவில்லை.
இந்நிலையில் நேற்று, அமெரிக்க ராணுவப் படைகள், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்து ஏவப்பட்ட ஒரு ட்ரோனை இடைமறித்து அழித்ததாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு (சென்ட்காம்) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.