பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து நேபாள சுழல்பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சேனை அந்நாட்டின் பதான் உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது.
அவருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லாததால் அவரை விடுவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இதன் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு கிரிக்கெட் விளையாட அனுமதி கிடைத்துள்ளது. அத்துடன் நேபாளத்தின் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அணியில் இணைவதற்கான வாய்ப்பு தோன்றியுள்ளது.
இந்த வழக்கு தீர்ப்பு வெளியான சூட்டுடன் கருத்து வெளியிட்ட நேபாள கிரிக்கெட் சங்கத்தின் பேச்சாளர் 'ஐசிசியின் ஒப்புதல் கிடைக்குமாக இருந்தால் லமிச்சேனை நேபாளத்தின் ரி20 உலகக் கிண்ண குழாத்தில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படும். ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான கடைசி 15 வீரர்கள் கொண்ட குழாத்தை உறுதி செய்வதற்கு பங்குபற்றும் நாடுகளுக்கு மே 25ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. எனவே, அவரை குழாத்தில் இணைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது' என்றார்.
ஒன்பதாவது ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயம் ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
'சந்தீப் லமிச்சேனை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளதால், அவர் இப்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்று நேபாள கிரிக்கெட் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
நேபாளத்தின் பூர்வாங்க ரி20 உலகக் கிண்ண அணி ஏற்கனவே கரிபியன் தீவுகளுக்கு சென்று அங்கு சென். வின்சென்ட்டில் பயிற்சி பெற்று வருகிறது. உலகக் கிண்ணப் போட்டி நெருங்கும்போது நேபாள அணியினர் ஐக்கிய அமெரிக்கா செல்வர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நேபாளத்தின் முதலாவது போட்டி நெதர்லாந்துக்கு எதிரானது. அப்போட்டி டல்லாசில் ஜூன் 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பதான் உயர் நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் திர்த்தராஜ் பட்டராய், 'ஆதாரம் இல்லாததால்' லமிச்சேன் விடுவிக்கப்பட்டதாக நேபாள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
காத்மாண்டு நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதியினால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையின்போது, 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த லமிச்சேன் குற்றவாளி என கடந்த ஜனவரி 10ஆம் திகதி தீர்ப்பளித்தது.
லமிச்சேனுக்கு 2,225 அமெரிக்க டொலர் அபராதம் விதித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 1,500 அமெரிக்க டொலர்களை வழங்குமாறும் உத்தரவிட்டது.
ஒற்றை நீதிபதி விசாரணையின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் லமிச்சேனை, நேபாள கிரிக்கெட் சங்கம் இடைநீக்கம் செய்தது.
தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை எதிர்த்து இந்த மாத முற்பகுதியில் மேன்முறையீடு ஒன்றை லமிச்சேன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் தொடர்வதால் அவரை சிறைக்கு வெளியே இருக்க அனுமதிக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்க, நீதிமன்றத்தினால் விடுதலையான லமிச்சேனை ரி20 உலகக் கிண்ணத்துக்கான நேபாள குழாத்தில் இணைப்பதற்கு நேபாள கிரிக்கெட் சங்கம் தீர்மானித்துள்ளதற்கு மனித உரிமைகள் குழு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.