பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி
09 May,2024
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடரில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ளது குவாடர். இது துறைமுக நகரமாகும். இங்கு உள்ள சுர்பந்தர் பகுதியில் மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் இன்று திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள், அப்பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், அவர்கள் பஞ்சாபில் உள்ள கானேவால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீஸ் அதிகாரி கூறினார்.
சடலங்கள் மற்றும் காயமடைந்த நபர் குவாடர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. குவாடர் தாக்குதல் சம்பவத்துக்கு பலுசிஸ்தான் மாகாண முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு உதவியவர்களையும் கைது செய்ய அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் இந்த விவகாரம் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் புக்டி தெரிவித்துள்ளார்.
பலூசிஸ்தானின் நுஷ்கி மாவட்டத்தில் தனித்தனி பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் பேருந்தில் சென்ற 11 பேர் கடத்தி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்து மூன்று வாரங்களுக்குப் பிறகு தற்போதைய தாக்குதல் நடந்துள்ளது. கடந்த மார்ச் 20 அன்று குவாடர் துறைமுக ஆணைய காலனியில் நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலை, பாதுகாப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு முறியடித்தனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் அடுத்தடுத்து பயங்கரவாதத் தாக்குதல் நடந்து வருவது அங்கு வசிப்போரிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.