ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில் ‘அல் ஜசீரா’ அலுவலகம் மூடல்: இஸ்ரேல் அரசு நடவடிக்கை
07 May,2024
இஸ்ரேலில் ‘அல் ஜசீரா’ செய்தி நிறுவனத்தின் ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதன் அலுவலகமும் மூடப்பட்டது. காசாவில் இருக்கும் ஹமாஸ் அமைப்பினரை ஒடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. அங்கு வசிக்கும் பாலஸ்தீன மக்களின் இன்னல்களையும், கள நிலவரத்தையும் கத்தார் நாட்டு செய்தி நிறுவனமான ‘அல் ஜஸீரா’ வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் ‘அல் ஜஸீரா’ செய்தி நிறுவனம் செய்திகளை வெளியிட்டு வருவதாக கூறி, அந்த நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்ரேல் அரசுக்கு எதிராகத் தூண்டும் பதிவுகளைப் பரப்பும் எவரும் இஸ்ரேலில் இருந்து ஒளிபரப்பு செய்ய முடியாது. அதனால் அல் ஜஸீராவுக்கு இஸ்ரேலில் தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று முதல் இஸ்ரேலில் ‘அல் ஜசீரா’ ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து ஜெருசலேத்தில் செயல்படும் ‘அல் ஜசீரா’ அலுவலகத்திற்கு சென்ற போலீஸ் படை, அந்த செய்தி நிறுவன நெட்வொர்க்கின் ஒளிபரப்பு உபகரணங்களை கைப்பற்றியது. அதன்பின் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.