ஐ.நாவில் பலஸ்தீனத்தை நிராகரித்தது அமெரிக்கா
20 Apr,2024
ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம் முழு அங்கத்துவம் பெறுவதை தடுக்கும் வகையில் அமெரிக்கா பாதுகாப்புச் சபையில் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.
பலஸ்தீனத்திற்கு முழு அங்கத்துவத்தை பெறுவதற்கு ஐ.நா பொதுச் சபைக்கு பரிந்துரைப்பதற்காகவே பாதுகாப்புச் சபையில் நேற்று முன்தினம் (18) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பொதுச் சபையில் 12 நாடுகள் ஆதரவு வழங்கியபோதும் பிரிட்டன் மற்றும் சுவிட்சர்லாந்து வாக்களிப்பதை தவிர்த்தன.
‘இரு நாட்டுத் தீர்வை அமெரிக்கா தொடர்ந்தும் வலுவாக ஆதரிக்கிறது. இந்த வாக்கு பலஸ்தீன நாட்டுக்கு எதிரானது இல்லை என்றபோதும், தரப்புகளுக்கு இடையிலான நேரடி பேச்சுவார்த்தை மூலம் மாத்திரமே அது செயற்படுத்தப்பட வேண்டும்’ என்று ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபட் வூட் பாதுகாப்புச் சபையில் தெரிவித்தார்.
அமெரிக்கா வீட்டோவை பயன்படுத்தியதற்கு கண்டனத்தை வெளியிட்ட பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், இந்த செயல் ‘நியாயமற்றது, தார்மீகமற்றது மற்றும் நியாயப்படுத்த முடியாதது’ என்று சாடினார்.