ஹிஸ்புல்லாவின் சிரேஷ்ட தளபதியை கொன்றது இஸ்ரேல்
16 Apr,2024
லெபனானில் வாகனம் ஒன்றை குறி வைத்து இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் சிரேஷ்ட தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் கரையோரப் பிராந்தியத்தின் தளபதியான இஸ்மாயில் யூசப் பாஸ்,(Ismail Yousef Baz)என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் இராணுவப் பிரிவில் மூத்த அதிகாரி
இவர் "ஹிஸ்புல்லாவின் இராணுவப் பிரிவில் மூத்த அதிகாரி" என்பதுடன் அந்த அமைப்பில் பல பதவிகளை வகித்தவர், தற்போது கடலோரப் பிராந்தியத்தின் தளபதியாக செயற்படுவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
அவர் லெபனானில் உள்ள கடலோரப் பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ரொக்கெட் மற்றும் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவுவதிலும் திட்டமிடுவதிலும் ஈடுபட்டார்" என்று இராணுவம் மேலும் தெரிவித்தது.
அண்மைய மாதங்களில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஒரு படைப்பிரிவின் தளபதிக்கு சமமான பதவியில் உள்ள ஆறாவது ஹிஸ்புல்லா அதிகாரி பாஸ் ஆவார்.
கடந்த 6 மாதங்களில் 30க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தளபதிகள் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இவர் மீதான தாக்குதலுக்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு, செஹாபியே நகரில் ஒரு வாகனத்தின் மீது மற்றொரு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.எனினும் அந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதேவேளை ஹிஸ்புல்லா அமைப்பினர் வடக்கு இஸ்ரேலில் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் மூன்று பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.