இஸ்ரேல் பதிலடிக்கு பயந்து ஈரான் தனது அணு உலைகளை தற்காலிகமாக மூடியிருப்பதாக, ஐநா அணு கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது.
பழைய எதிரிகளான இஸ்ரேல் - ஈராக் நாடுகள் புதிய காரணங்களை முன்னிறுத்தி பெரும் போருக்கு தயாராகி வருகின்றன. இஸ்ரேலுக்கு எதிராக தீவிரமாக களமாடி வரும் ஈரான்,பெரும்பாலும் மறைமுகமாகவே அவற்றை மேற்கொண்டு வந்தது. காசாவின் ஹமாஸ், லெபனான் மற்றும் சிரியாவின் ஹெஸ்பொல்லா ஆகியவை மூலமாகவே இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை ஈரான் தூண்டி வந்தது.
அண்மையில் சிரியாவின் டமாஸ்கஸில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி, 2 உயரதிகாரிகள் உட்பட 7 ஈரான் ராணுவத்தினரை இஸ்ரேல் கொன்றது. இதற்கு பதிலடி நடவடிக்கையாக, கடந்த சனி - ஞாயிறு இடையிலான ஒரே இரவில் 300க்கும் மேலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலை குறிவைத்து ஈரான் தாக்கியது. அவற்றை தங்களது வான்பாதுகாப்பு அமைப்புகள் மூலமாக இடைமறித்து முறித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
ஈரான் தாக்குதலை அடுத்து தற்போது இஸ்ரேலின் முறை என்பதால், உலக நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. ஏனெனில் இஸ்ரேல் தாக்குதலின் தீவிரம் அந்தளவுக்கு மோசமானதாக இருக்கும். அதிலும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, குறிவைத்து தாக்குவதில் இஸ்ரேல் பாணி தனி என்பதாலும் மத்திய கிழக்கில் அச்சம் சூழ்ந்துள்ளது.
இஸ்ரேல் பதிலடி தரும் என்பதை எதிர்பார்த்தே ஈரான் தாக்குதலை தொடங்கியிருப்பதால், அடுத்த சுற்றில் முழுவீச்சிலான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கும் என ஈரான் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கிறது. ஆனால் இஸ்ரேல் தாக்குதலில் இறங்குமா, எப்போது அதனை தொடங்கும், எத்தனை தீவிரத்துடன் போரிடும் என்பவை கேள்வியாகவே இருக்கின்றன. இதன் மறுபக்கத்தில் ஈரானுக்கு இஸ்ரேல் பதிலடி தராது என்றும் சிலர் கணித்து வருகின்றனர்.
ஏனெனில், சிரியாவில் ஈரான் அதிகாரிகளை இஸ்ரேல் கொன்றொழித்ததற்கு பதிலடியாகவே ஈரான் தாக்கியது. அந்த ஈரான் தாக்குதலையும் இஸ்ரேல் திடமாக எதிர்கொண்டு முறியடித்துள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் உயிர்ப்பலி உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் உறுதி செய்யப்பட வில்லை. மேலும் இஸ்ரேலின் கவனம் முழுமைக்கும் காசாவின் ஹாமாஸ் குழுக்களை அழித்தொழிப்பதாகவே உள்ளது. ஈரான் மீதான தாக்குதல், மத்திய கிழக்கின் பதற்றத்தை அதிகரித்து மூன்றாம் உலகப்போர் வரை தீவிரமாக்கச் செய்யலாம்.
ஆனபோதும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுக்கும் அபாயத்தை ஐநா உட்பட எவரும் மறுப்பதாக இல்லை. அதிலும் அணு உலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவது இஸ்ரேலின் உத்தி என்பதாலும் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. 1981-ல், அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி, சதாம் ஹுசைனின் ஈராக்கில் உள்ள ஒசிராக் அணு உலை மீது இஸ்ரேல் குண்டுகளை வீசித் தாக்கியது. 2018ம் ஆண்டு, அதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாக சிரியாவில் ஒரு அணு உலைக்கு எதிராக ஒரு ரகசிய விமானத் தாக்குதலை நடத்தியதாக ஒப்புக்கொண்டது.
2010-ல் ஈரானின் அணு உலை விஞ்ஞானிகள் படுகொலை செய்ததோடு, அதற்கு முந்தைய ஆண்டில் மற்றொருவரை கடத்தியதாகவும் இஸ்ரேல் மீது ஈரான் குற்றம் சாட்டியது. இந்த வரிசையில் ஈரானின் அணு உலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்கும் என்பதால், ஈரான் தனது அணு உலைகளை தற்காலிகமாக மூடியதோடு, வான் தாக்குதல் அபாயங்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. இவற்றை ஐநா அமைப்பின் அணு கண்காணிப்பு மையம் உறுதி செய்துள்ளது.