விமானங்கள் மூலம் காசா மக்களுக்கு அமெரிக்கா உணவு பொருள் விநியோகம்
04 Mar,2024
வாஷிங்டன்: காசாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு அமெரிக்க விமான படை விமானம் மூலம் உணவு பொருட்களை விநியோகித்துள்ளது. லஸ்தீன ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த அக்டோபர் 7ம் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதன் பின்னர் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த போரால் காசாவில் உள்ள பெரும்பாலானோர் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என்று ஐநா தகவல் வெளியிட்டிருந்தது. கடந்த 29ம் தேதி காசா மக்களுக்காக 30 லாரிகளில் உணவு பொருட்கள் கொண்டுவரப்பட்டன. உணவு பொருட்களை வாங்குவதற்காக ஏராளமானோர் கூடினர். மக்கள் முண்டியடித்து கொண்டு உணவை வாங்கி கொண்டிருந்தபோது கூட்டத்தை கலைப்பதற்கு இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தியதில் 115 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாலஸ்தீன மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இந்நிலையில், அமெரிக்க விமான படையின் 3 விமானங்கள், ஜோர்டான் விமான படையின் 2 விமானங்கள் காசாவில் நேற்று முன்தினம் உணவு பொட்டலங்களை விநியோகித்தன. முதல்கட்டமாக 38,000 உணவு பொட்டலங்கள் ஏர் டிராப் செய்யப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.