.
ஐக்கிய அரபு அமீரக சிறைகளிலிருந்து 900 கைதிகளை விடுவிக்க அதிகாரிகளுக்கு 10 லட்சம் திர்ஹாம் நன்கொடை அளித்துள்ள இந்திய தொழிலதிபரின் செயல் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகில் மிகவும் கடுமையான சட்டங்களை கொண்ட நாடுகளில் ஒன்று ஐக்கிய அரபு அமீரகம். இங்கு சிறு தவறுக்குக் கூட அதிகப்படியான தண்டனை வழங்கப்படுகிறது. இஸ்லாமிய சட்டப்படி தண்டனை வழங்கப்படும் நிலையில், சிறையில் பல ஆண்டுகளாக கைதிகள் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது.
இது போன்ற வழக்குகளில் அதிகளவில் சிக்குவது வெளிநாடுகளில் இருந்து கூலி வேலைக்காக வருபவர்கள் தான். சில நேரங்களில் இஸ்லாமிய சட்டப்படி இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினால், கைதிகள் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உருவாகும். ஆனால், கூலி தொழில் செய்பவர்கள் பல லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை கொடுத்து விடுதலையாவது நடைமுறையில் சாத்தியம் இல்லை.
.
இதனால் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் இவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த இழப்பீட்டுத் தொகையை நன்கொடையாக வழங்கி வருகின்றன. அந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் பெரோஸ் மெர்ச்சென்ட் (66), என்பவரின் ’தி ஃபர்கட்டன் சொசைட்டி’ என்ற தொண்டு நிறுவனமும் பல்வேறு நல்ல காரியங்களை செய்து வருகிறது.
நகைக்கடை உரிமையாளரான பெரோஸ் கடந்த பல ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் கைதிகளுக்கு உதவிடும் வகையில் தனது வருமானத்திலிருந்து கோடிகளை நன்கொடையாக வழங்கி வருகிறார். அந்த வகையில் 2008-ம் ஆண்டு துவக்கப்பட்ட தி ஃபர்கட்டன் சொசைட்டி மூலமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை அமீரகம் முழுவதும் 900 கைதிகளை விடுதலை செய்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளார் பெரோஸ்.
.
அஜ்மானை சேர்ந்த 495 கைதிகள், புஜைராவிலிருந்து 170 கைதிகள், துபாயிலிருந்து 121 கைதிகள், உம்முல் குவைனில் இருந்து 69 கைதிகள், மற்றும் ராஸ் அல் கைமாவிலிருந்து 28 கைதிகளை விடுவிக்க பெரோஸ் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மத்திய சிறைகளில் காவல்துறை இயக்குநர் ஜெனரல்களுடன் இணைந்து பெரோஸ் மெர்ச்சென்ட் இந்த சேவையை செய்து வருகிறார். பல ஆண்டுகளாக, பல்வேறு மதம் மற்றும் நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் கைதிகள் விடுதலை பெற்று தங்கள் குடும்பத்துடன் வாழ இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அந்த வகையில் ரம்ஜான் பண்டிகைக்கு முந்தைய நல்ல நடவடிக்கையாக 900 கைதிகளை விடுவிக்க ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுக்கு 10 லட்சம் திர்ஹாம் நன்கொடையாக வழங்கியுள்ளார் பெரோஸ். இது இந்திய மதிப்பில் சுமார் 2.25 கோடி ரூபாய் ஆகும்.
இது குறித்து பேசியிருக்கும் பெரோஸ், ”இந்த விவகாரத்தில் அமீரக அரசு அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. மனிதநேயம் என்பது தேசம் என்ற எல்லைகளை தாண்டிய ஒன்று. சிறையில் வாடும் ஏழைக் கைதிகளை அவர்களது சொந்த நாட்டிலும், சமுதாயத்திலும் அவர்கள் குடும்பத்துடனும் சமரசம் செய்வதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்க நாங்கள் ஒன்றாக செயல்படுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து விடுவிப்பது மட்டுமின்றி, விடுதலையாகும் அனைவரும் சொந்த ஊர்களுக்கு திரும்ப விமான கட்டணம் உள்ளிட்டவற்றையும் பெரோஸின் தி ஃபர்கட்டன் சொஸைட்டி அமைப்பு வழங்கி வருகிறது.
2024-ல் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்ய வைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார் பெரோஸ். இவரால் விடுதலை ஆனவர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வசித்து வரும் நிலையில், அவர்கள் இவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.