காசா தாக்குதலை கண்டித்து இஸ்ரேலிய தூதரகம் முன்பு அமெரிக்க வீரர் தீக்குளிப்பு
27 Feb,2024
வாஷிங்டன்: காசா தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முன்பு அமெரிக்க விமானப்படை வீரர் தீக்குளித்து பலியானார். காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவாக உள்ளன. இந்தநிலையில் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு விமானப்படை வீரர் தீக்குளித்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் அன்டோனியோவைச் சேர்ந்த 25 வயதான விமானப்படை வீரர் ஆரோன் புஷ்னெல். இவர் காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நேற்று மதியம் 1 மணிக்கு வாஷிங்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு சென்றார். அங்கு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ட்விச்சில் நேரடி ஒளிபரப்பு செய்ய தொடங்கினார். பின்னர் தனது மொபைலை கீழே வைத்துவிட்டு, ‘இனி இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன்’ என்று கூறி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த டிசம்பரில், அட்லாண்டாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஒருவர் தன்னைத்தானே எரித்துக் கொண்டார். தற்போது அமெரிக்க விமானப்படை வீரர் தற்கொலை செய்துள்ளார்.