காசா போருக்குப் பின் இஸ்ரேலின் திட்டம் என்ன? - நெதன்யாகு புதிய தகவல்
24 Feb,2024
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
காசா: இஸ்ரேல் - காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் குழுவை ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து வருகிறார். இச்சூழலில், காசா போருக்கு பிந்தைய திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வெளியிட்டிருக்கிறார். நெதன்யாகு தனது அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்த திட்டத்தில் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, போருக்குப் பின்னர் நடக்கவிருக்கும் திட்ட வரையறையை நேதன்யாகு முதன்முறையாக பொதுவெளியில் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில், காசாவை நிர்வகிப்பதில் இஸ்ரேலின் பங்கு என்ன என்பதை நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஹமாஸ் மீதான போர் முடிவடைந்த பின்னர் ராணுவம் விலக்கப்பட்ட காசா முனையின் பாதுகாப்பு, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும். சிவில் விவகாரங்களில் இஸ்ரேல் பங்கு வகிக்கும். பாதுகாப்பு அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில், காசா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாக செயல்படும். மேலும், காசாவுக்குள் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை நிறுவும். ஆனால், இந்த திட்டத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அல்லது அமைப்புகளுடன் தொடர்பில் இல்லாத மற்றும் அவர்களிடமிருந்து நிதியுதவி பெறாத உள்ளூர் அதிகாரிகளால் காசா நிர்வகிக்கப்படும் என்றும் இந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளளது.
ஆனால், இந்தத் திட்டத்துக்கு பாலஸ்தீனியர்கள் அனைவரும் ஒப்புக்கொள்வார்களா என்பது தெளிவாக தெரியவில்லை. பல ஆண்டுகளாக, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பாலஸ்தீன ஆளும் அமைப்புகளை உருவாக்க இஸ்ரேல் பலமுறை முயற்சி செய்து தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீன சமூகத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டனர் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே, அவர்களை முற்றாக ஒழிக்கவேண்டும் என்ற இலக்கை இஸ்ரேல் அடைய முடியாது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 2007-ல் காசா பகுதியை ஆக்கிரமித்த பயங்கரவாதக் குழுவான ஹமாஸை நசுக்க இஸ்ரேல் உறுதியாக உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.
காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி இதுவரை 29,514 மக்களைக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் 69,616 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியத் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.