முடிவுக்கு வரும் இஸ்ரேல் - காசா போர்.போர் நிறுத்தத்தை முன்மொழியும் ஹமாஸ்
07 Feb,2024
கத்தார் மற்றும் எகிப்து தேசங்களின் மத்தியஸ்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, நான்கரை மாதங்களுக்கான 3 கட்ட போர் இடைநிறுத்த நடவடிக்கைகளை ஹமாஸ் முன்மொழிந்துள்ளது. இந்த ஏற்பாடு நான்கு மாதமாக காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைக்கு முடிவு கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் முயற்சியில், கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் சார்பிலான மத்தியஸ்தர்கள் கடந்த வாரம் அனுப்பிய முன்மொழிவுக்கு ஹமாஸ் திருப்தியான பதிலை தற்போது தந்துள்ளது. இதில் 135 நாட்களுக்கான போர்நிறுத்த திட்டத்தை ஹமாஸ் முன்வைத்துள்ளது. இது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 4 மாதங்களாக காசாவில் நீடித்து வரும் கோரமான போருக்கு முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலா 45 நாட்களுக்கு நீடிக்கும் மொத்தம் 3 கட்ட போர் நிறுத்த நடவடிக்கைகள் இதில் அடங்கியுள்ளன. காசாவின் மறுசீரமைப்பு, பரஸ்பரம் பிணைக்கைதிகள் மற்றும் சிறைக்கைதிகளை பரிமாறிக்கொள்ளுதல், காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறுவது, போரில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை பரிமாறிக்கொள்ளுதல், காசா மக்களுக்கான அவசர மற்றும் அவசிய உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த போர் நிறுத்த முன்மொழிவில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் கத்தார் - எகிப்து நாடுகளின் மத்தியஸ்தர்கள் முன்னெடுத்த நீண்ட முயற்சிகள் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் இந்த சுமூக நடவடிக்கைக்கு ஹமாஸ் முன்வந்துள்ளது. முதல் கட்ட நடவடிக்கையின் போது, ஹமாஸ் வசமிருக்கும் இஸ்ரேலின் பிணைக்கைதிகளில் அனைத்து பெண்கள், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் விடுவிக்கப்படுவார்கள். பதிலுக்கு இஸ்ரேலிய சிறைகளில் இருந்து பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள்.
மீதமுள்ள ஆண் பிணைக்கைதிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிமாற்றங்களில், தவணை முறையில் விடுவிக்கப்படுவார்கள். மூன்றாம் கட்டத்தின் முடிவில், போரை நிறுத்துவது குறித்து இரு தரப்பினரும் உடன்பாட்டை எட்டுவார்கள். இஸ்ரேல் வசமிருக்கும் பாலஸ்தீன கைதிகளில் 1500 பேரை விடுவிக்குமாறு ஹமாஸ் கோருகிறது. இந்த எண்ணிக்கையில் 500 பேர், இஸ்ரேலால் ஆயுள் தண்டனைக்கு ஆளானவர்களின் பட்டியிலில் இருந்து ஹமாஸ் தேர்ந்தெடுக்க விரும்புகிறது.
இது போன்ற ஒருசில நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் இறங்கி வருவது பெரும் சவாலாக அமையக்கூடும். இவற்றுக்கு அப்பால், காஸாவின் குடிமக்களுக்கு உணவு மற்றும் பிற உதவிகளின் போக்கை அதிகரிக்கும் வகையில், தினத்துக்கு 500 டிரக்குகளை காசாவுக்கு அனுமதிக்கவும் ஹமாஸ் கோரி உள்ளது. இந்த நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் உடன்படுவதை பொறுத்து, காசாவில் அமைதி திரும்புவது விரைவில் சாத்தியமாகும்.