கச்சா எண்ணெய்: விற்க முடியாமல் கடும் போராட்டத்தில் ரஷ்யா!
27 Jan,2024
அமெரிக்கத் தடை உள்ளிட்ட சிக்கல் காரணமாக 14 கப்பல்களில் நிரப்பப்பட்ட கச்சா எண்ணெய் விற்க முடியாமல் பல வாரங்களாக ரஷ்யா போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் கொரிய கடற்பகுதியில் பல வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது ரஷ்யாவின் 14 எண்ணெய் கப்பல்கள். ஒவ்வொரு கப்பலிலும் 10 மில்லியன் பீப்பாய் அளவுக்கு கச்சா எண்ணெய் நிரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அமெரிக்கத் தடைகள் மற்றும் கட்டணச் சிக்கல்கள் காரணமாக இதுவரை விற்கப்படவில்லை என்றே வெளியான தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. சுமார் ஒரு மாத காலம் உற்பத்தி செய்த இந்த கச்சா எண்ணெய் மொத்தமாக 1.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்றே கூறப்படுகிறது.
ரஷ்யாவின் Sakhalin-1 திட்டத்தில் அமெரிக்காவின் Exxon Mobil நிறுவனம் இணைந்து செயல்பட்டு வந்தது. ஆனால் ரஷ்ய- உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் 2022ல் Exxon Mobil இந்த திட்டத்தில் இருந்து வெளியேறியது.
அதன் பின்னர் ரஷ்யாவால் தொடர்ந்து அந்த திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது. இதனால் அதன் உற்பத்தி மொத்தமாக சரிவடைந்தது. அதிலிருந்து முழுமையாக மீளவில்லை.
இதனிடையே, ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் உக்ரைனில் உள்ள அவரது போர் முயற்சிகளுக்கும் வருவாயைக் குறைக்க பொருளாதாரத் தடைகள் தேவை என்று அமெரிக்கா கூறியுள்ளது, ஆனால் உலக சந்தைகளுக்கு ரஷ்ய எண்ணெய் மற்றும் மின்சாரம் உள்ளிட்டவை சந்தைப்படுத்துவதை அமெரிக்கா இதுவரை தடுக்கவில்லை.
மேலும், கடந்த ஆண்டு Sokol தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் கப்பல்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.