பெண் பணயக் கைதிகளை வைத்து ஹமாஸ் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு
27 Jan,2024
தென்னாபிரிக்காவால் இஸ்ரேலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள நிலையில் ஹமாஸ் திடீரென காணொளியொன்றை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுத் தள்ளியதுடன் பலரையும் பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
அதன் பின்னர் போர் பிரகடனம் அறிவித்த இஸ்ரேல் காசா மீது மட்டுமல்லாமல் முழு வீச்சில் தாக்குதல் தொடங்கி ஹமாஸ் அமைப்பினரை தேடி அழித்து வருகிறது.
மூன்று பெண்கள்
இந்நிலையில், காசா பகுதியில் பலஸ்தீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று இஸ்ரேல் பெண்கள் தொடர்பான காணொளியொன்றை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
குறித்த காணொளியில் உள்ள பெண்களில் இருவர் தாங்கள் இஸ்ரேல் இராணுவ வீரர்கள் என்றும், மூன்றாவது பெண் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த குடிமகன் என்றும் கூறுகின்றனர்.
இஸ்ரேலை சேர்ந்தவர்கள்
அதேவேளை, இவர்கள் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் என்று சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. அந்த காணொளியில் கடந்த 107 நாட்களாக ஹமாஸ் காவலில் இருப்பதாக அந்த பெண்கள் கூறியுள்ளனர், இதன் மூலம் அந்த காணொளி கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அத்துடன், காசாவில் நடக்கும் இனப்படுகொலையைத் தடுக்க இஸ்ரேல் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று ஐ.நா.வின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த சிறிது நேரத்திலேயே இந்த காணொளி வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.