100-வது நாள்...ல் இஸ்ரேல் - ஹமாஸ் போர்
15 Jan,2024
அக்.7 அன்று இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்த ஹாமாஸ் ஆயுதக் குழுவினர் நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதலில் சுமார் 1200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். பதிலடி நடவடிக்கையாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தொடங்கிய போர் இன்று(ஜன.14) 100வது நாளினை எட்டியுள்ளது.
ஹமாஸ் ஆயுதக் குழுவினரை முற்றிலும் அழிப்பது, அவர்கள் வசம் உள்ள பிணைக்கைதிகளை மீட்பது என 2 நோக்கங்களுடன் இஸ்ரேல் படைகள் காசாவில் நிலைகொண்டுள்ளன. வான்படைத் தாக்குதல் மூலம் காசாவை நிர்மூலம் செய்த பின்னர், தற்போது தரை மார்க்கமாக இறங்கி வீதிவீதியாக போரிட்டு வருகிறது இஸ்ரேல் பாதுகாப்பு படை. ஹமாஸ் ஆயுதக் குழுவினரை கொன்றும், சிறை பிடித்துமாக இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
100 நாட்களை எட்டியபோதும், இப்போதைக்கு இந்தப் போர் முடியாது என்பதையே நடப்பு சூழல் காட்டுகிறது. ஹமாஸ் குழுவினருக்கு ஆயுத வரத்து அதிகரித்து வருவதாலும், ஆயுதக் குழுவினர் இன்னமும் பதுங்குமிடங்களில் இருப்பதாலும் இஸ்ரேல் ராணுவத்தினரின் தாக்குதல் ஓய்ந்தபாடில்லை. எகிப்து எல்லை வழியாக ஹமாஸ் அமைப்பினருக்கு நீளும் உதவிகளை முடக்க முடியாது இஸ்ரேல் தவித்து வருகிறது.
ஹமாஸ் ஆயுதக் குழுவினரை குறிவைத்த இஸ்ரேல் தாக்குதலில், அப்பாவி மக்களே அதிகளவில் இறந்துள்ளனர். இந்த வகையில் காசாவில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை எட்ட உள்ளது. காசா பிராந்தியம் இனி மீண்டெழவே முடியாத வகையில் சிதிலமடைந்துள்ளது. உயிர் தப்பினாலும் காயங்களோடு சிகிச்சைக்காகவும், உணவுக்காகவும் உலக நாடுகளின் உதவியைக் கோரி காசா மக்கள் காத்துள்ளனர்