மத்திய கிழக்கு முழுவதிலும் ஒரு பெரிய போர் விரிவாக்கத்தின் மத்தியில், அமெரிக்க இராணுவம் யேமனை தாக்குவதற்கான “விருப்பங்களை தயார் செய்துள்ளது” என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
“சாத்தியமான இலக்குகளில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள், கடலோர ரேடார் நிறுவல்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கான சேமிப்பு வசதிகள் போன்ற உள்கட்டமைப்புகளை குறிவைத்தல் ஆகியவை இதில் அடங்கும்” என்று ஜேர்னல் தெரிவித்துள்ளது.
யேமனுக்கு அச்சுறுத்தலாக, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, “நம்மை, நமது நலன்களை, எங்கள் பங்காளிகளை மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் சுதந்திர போக்குவரத்தை பாதுகாக்கும் பணியில் இருந்து அமெரிக்கா பின்வாங்காது” என்று புதன்கிழமை கூறினார்.
“இந்த இலக்குகளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் மத்திய கிழக்கில் ஒரு குறிப்பிடத்தக்க படை இருப்பை நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம்.
இதில் USS Dwight D. Eisenhower ஐ மையமாகக் கொண்ட ஒரு விமானம் தாங்கி தாக்குதல் அணியும், அதன் ஏறக்குறைய 80 விமானங்களைக் கொண்ட விமானப் பிரிவும், அத்துடன் அதன் 26 கடல் பயணப் பிரிவைக் கொண்ட ஒரு நீர், நிலம் இரண்டிலும் செயல்படும் தயார் குழுவும் அடங்கும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்த கப்பல்களில், “4,000 க்கும் மேற்பட்ட விரைவு கடற்படை மற்றும் 50 க்கும் மேற்பட்ட விமானங்கள்” உள்ளன என்று கிர்பி கூறினார்.
“இந்தக் கப்பல்கள் மற்றும் அவற்றின் கடற்படைகள், போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் விமானங்கள் மற்றும் கடலில் கூடுதல் திறன் கொண்ட போர்க்கப்பல்களின் மூன்று கூடுதல் படைப்பிரிவுகளால் நிரப்பப்படுகின்றன” மேலும், இந்தக் கப்பல்கள், “தாக்குதல் தொடுக்கும்ஸ இராணுவ சக்தியை” பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்று கிர்பி மேலும் தெரிவித்தார்.
இந்த போர்வெறிமிக்க அறிக்கைகள் மத்திய கிழக்கு முழுவதிலும் இரண்டு நாட்கள் பெரும் பதட்டங்களை அதிகரித்துள்ளன.
கடந்த செவ்வாயன்று இஸ்ரேல், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹமாஸின் அரசியல் குழுவின் துணைத் தலைவரான சலே அல்-அரூரியைக் கொன்றது. தாக்குதலுக்கு இஸ்ரேல் தனது பொறுப்பை மறுத்தாலும், அமெரிக்க அதிகாரிகள் பின்னர் அல் ஜசீராவிடம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை உறுதிப்படுத்தினர்.
அல்-அரூரியின் கொலைக்கு அமெரிக்கா திறம்பட ஒப்புதல் அளித்தது. வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கிர்பி, “ஹமாஸ் முன்வைக்கும் அச்சுறுத்தலைத் தீர்க்க இஸ்ரேலுக்கு உரிமையும் பொறுப்பும் உள்ளது, அதாவது ஹமாஸ் தலைவர்களைத் தாக்கும் உரிமையும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு” என்று கூறினார்.
அத்துடன், “அல்-அரூரி ஒரு குறிப்பிடத்தக்க ‘உலகப் பயங்கரவாதி’ என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். அவர் உண்மையில் இறந்திருந்தால், அவரது இழப்புக்காக யாரும் கண்ணீர் சிந்தக்கூடாது” என்று அவர் மேலும் கூறினார்,
கடந்த புதன்கிழமை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் தூதரகப் பணியில் இருந்தபோது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பால் கொல்லப்பட்ட ஈரானிய ஜெனரல் மேஜர் ஜெனரல் காசிமி சுலைமானியின் நினைவேந்தல் விழாவில் நடந்த குண்டு வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் பல ஆண்டுகளாக ஈரான் முழுவதும் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி வந்தாலும், இந்த சம்பவத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் பொறுப்பேற்க மறுத்துள்ளன.
ஈரானின் பாராளுமன்ற துணைத் தலைவர் மொஜதபா சோல்னூரி, குண்டுவெடிப்புக்கு காரணம் “சியோனிச ஆட்சிதான் என்பது தாக்குதல்களின் பாணியிலிருந்து தெளிவாகிறது” என்று கூறினார்.
ஆனால் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கிர்பி, “இதில் இஸ்ரேல் எந்த வகையிலும் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியும் எங்களிடம் இல்லை” என்று அறிவித்தார்.
கடந்த வாரம், பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், இஸ்ரேல் பல நாடுகளுடன் “போரில்” இருப்பதாகக் கூறினார்.
“நாங்கள் பல முனைப் போரில் இருக்கிறோம். காஸா, லெபனான், சிரியா, யூதேயா மற்றும் சமாரியா (மேற்குக் கரை), ஈராக், யேமன் மற்றும் ஈரான் ஆகிய ஏழு முனைகளில் இருந்து நாங்கள் தாக்கப்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.
அத்தோடு, ஈரானுக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலாக, “அந்த ஆறு முனைகளில் நாங்கள் ஏற்கனவே பதிலடி கொடுத்துள்ளோம்” என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஊடகங்கள் ஈரானுக்கு எதிராக நேரடிப் போரைத் தொடர்ந்தும் தூண்டி வருகின்றன.
ஈரான் மீதான பயங்கரவாத தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்ட நாளில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஈரான் “மத்திய கிழக்கில் வன்முறையின் உச்சக்கட்டம்” என்று ஒரு தலையங்கத்தை வெளியிட்டது. “விரைவில் அல்லது பின்னர், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இன்னும் நிலையான மத்திய கிழக்கை விரும்பினால் தடுப்பை மீண்டும் நிறுவ வேண்டும், அதாவது ஈரானை கையாள வேண்டும்” என்று அது குறிப்பிட்டது.
இந்த வாரம், ஆயிரக்கணக்கான துருப்புக்கள் காஸாவில் இருந்து திரும்பப் பெறப்படும் என்று இஸ்ரேல் அறிவித்தது,
இது அவர்கள் லெபனான் மீதான தாக்குதலில் பயன்படுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.
இஸ்ரேல் லெபனானுடனான அதன் வடக்கு எல்லையில் இருந்து 70,000ம் குடியிருப்பாளர்களை வெளியேற்றியுள்ளது மற்றும் அங்கு துருப்புக்கள் மற்றும் டாங்கிகளை குவித்துள்ளது.
லெபனான் எல்லையில் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலியப் படைகள் தினசரி குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கான பயணம் உட்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கு புறப்படுகிறார்.
இஸ்ரேலின் இனப்படுகொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை விரைவில் 30,000 ஐ நெருங்குகிறது, காஸாவின் அரசாங்க ஊடக அலுவலகம், அக்டோபர் 7 முதல் காஸாவில் 29,313 பேர் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று அறிவித்தது.
பிராந்தியம் முழுவதிலும் அதிகரித்து வரும் போரின் பின்னணியில், இஸ்ரேலிய ஆட்சியின் பகிரங்கமான இனப்படுகொலை பேச்சுக்களால் அமெரிக்கா நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
செவ்வாயன்று ஒரு அறிக்கையில், ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட், “காஸாவில் இருந்து பாலஸ்தீனியர்களின் பாரிய இடப்பெயர்வு இருக்கக்கூடாது, மேலும் இஸ்ரேலிய அமைச்சர்கள் பெசலேல் ஸ்மோட்ரிச் மற்றும் இடாமர் பென் கிவிர் ஆகியோரின் சமீபத்திய ஆத்திரமூட்டும் அறிக்கைகளை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்று அறிவித்தார்.
“காஸாவிற்கு வெளியே பாலஸ்தீனியர்களை மீள்குடியேற்றுவதற்கு வாதிடும் இஸ்ரேலிய அமைச்சர்களான பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் இடாமர் பென் க்விர் ஆகியோரின் சமீபத்திய அறிக்கைகளை அமெரிக்கா நிராகரிக்கிறது.
இந்த சொல்லாட்சி எரிச்சலூட்டுவதாகவும் மற்றும் பொறுப்பற்றதாகவும் உள்ளது. இதுபோன்ற அறிக்கைகள் இஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கையை பிரதிபலிக்கவில்லை என்று பிரதமர் உட்பட இஸ்ரேல் அரசாங்கத்தால் பலமுறையும் தொடர்ந்தும் எங்களிடம் கூறப்பட்டது. அவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்“ என்று ஒரு தனி அறிக்கையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது.
அமெரிக்கா தன்னிடம் தனிப்பட்ட முறையில் என்ன கூறியதாகக் கூறினாலும், நெதன்யாகு, காஸாவின் இனச் சுத்திகரிப்புக்கு பகிரங்கமாக ஒப்புதல் அளித்தார், அவரது நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், “தன்னார்வக் குடியேற்றம் குறித்துஸ இந்த திசையில் தான் நாங்கள் செல்கிறோம்” என்று கூறினார்.
நிச்சயமாக, இந்த அறிக்கைகள் இஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கைகளை நிஜமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இஸ்ரேல், காஸாவிற்கு எதிராக ஒரு நனவான இன அழிப்பு மற்றும் இனச் சுத்திகரிப்பு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இஸ்ரேல் என்ன செய்ய அனுமதிக்கப்படுகிறது என்பதில் தங்களிடம் “சிவப்பு கோடுகள்” எதுவும் இல்லை என்று அறிவிக்கும் அமெரிக்கா, இந்த இனப்படுகொலைக்கு முழு உடந்தையாக இருக்கிறது.
காஸாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக தென்னாப்பிரிக்காவின் குற்றச்சாட்டின் பேரில் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பொது விசாரணை நடத்தப்படும் என்று சர்வதேச நீதிமன்றம் (ICJ) கடந்த வியாழன் அன்று அறிவித்தது.
எவ்வாறாயினும், இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதையும், அதற்கு அமெரிக்கா உடந்தையாக இருப்பதையும், தொடர்ந்தும் அமெரிக்கா மறுத்து வருகிறது. “இனப்படுகொலையை உருவாக்கும் செயல்களை நாங்கள் இந்த கட்டத்தில் பார்க்கவில்லை” என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறினார்.
சர்வதேச நீதிமன்றத்தில், தென்னாப்பிரிக்கா வழக்கு தாக்கல் செய்ததைப் பற்றி கருத்து கேட்கப்பட்டபோது, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கிர்பி, அந்த சமர்ப்பிப்பு “தகுதியற்றது, எதிர்விளைவானது மற்றும் முற்றிலும் எந்த அடிப்படையும் இல்லாதது” என்று கூறினார்.
(தனிநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் [ICC] போலல்லாமல், மற்ற அரசுகளுக்கு எதிரான UN உறுப்பு நாடுகளின் குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கிறது. அமெரிக்க அரசாங்கம் ICC ஐ அங்கீகரிக்கவில்லை, ஆனால் ICJ மற்றும் அதன் தற்போதைய தலைவர், ஜோன் டோனோகு ஒரு அமெரிக்கர் ஆவர்.)
மனித உரிமை நிபுணர்களால் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான பொது கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.
ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு உரிமை தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பாலகிருஷ்ணன் ராஜகோபால், “கஸா மக்களை, குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைக் கருத்தில் கொண்டு வலுக்கட்டாயமாக இடம்பெயர வைப்பதானது, இனப்படுகொலைச் செயலாகும்” என்று அறிவித்தார்.
கடந்த புதனன்று, Euro-Med மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “சர்வதேச சட்டத்தின் வரம்புகளுக்கு அப்பால், காஸா பகுதியில் பொதுமக்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்வதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது” என்று அறிவித்துள்ளது.