ஹமாஸ் கைகளில் சீனாவின் ஆயுதங்கள் வந்தது எப்படி? இஸ்ரேல் எழுப்பும் புதிர் கேள்வி
07 Jan,2024
ஹமாஸ் ஆயுதக் குழுவின் கைகளில் சீனாவின் நவீன ஆயுதங்கள் வந்தது எப்படி என்ற புதிய புதிர்க் கேள்வியை இஸ்ரேல் எழுப்பியுள்ளது. ஹமாஸ் பின்னணியில் சீனா இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டுவதற்கு எதிராக சீனாவும் சீறியுள்ளது.
அக்.7 ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக, தற்போது வரை காசாவில் தீவிரமாக வேட்டையாடி வரும் இஸ்ரேலின் முன்புள்ள பெரும் கேள்விகளில் ஒன்று, ஹமாஸின் ஆயுத பின்புலம் குறித்தானது. ஹமாஸ் போராளிகளின் வீரமும், தாக்குதல் உத்திகளும் வீரம் செறிந்தவை. ஆனால் அவர்கள் வசம் இருப்பவை, இஸ்ரேலுடன் ஒப்பிடுகையில் அரதப் பழசானவை. ஆனால் அக்.7 அன்று இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை ஹமாஸ் தொடங்கியது முதல் தற்போது வரை ஹமாஸ் பலத்தின் பின்னணியில் பெரும் வல்லரசு இருப்பதாக இஸ்ரேல் சந்தேகித்து வந்தது.
காசா மீதான தரைவழித் தாக்குதலின்போது ஹமாஸ் போராளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை ஆராய்ந்த பின்னரே, இஸ்ரேலின் நீண்ட ஐயத்துக்கு விடை புலப்பட்டது. ஆயுதங்களைவிட இஸ்ரேலின் நகர்வுகளை மோப்பம் பிடிப்பதற்காக ஹமாஸ் பயன்படுத்திய உளவு - தகவல்தொடர்பு சாதனங்கள் அனைத்தும் சீனாவின் தயாரிப்புகளாக இருந்தன.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா போன்று, ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஈரான் சகல வகைகளிலும் ஆதரவளித்து வந்தது. எகிப்து, லெபனான் என மத்திய கிழக்கின் பல்வேறு இஸ்லாமிய ஆயுதக் குழுக்களின் புரவலராக ஈரான் விளங்கி வருகிறது. தனது ஹமாஸ் ஆதரவை ஈராக் வெளிப்படையாகவே வழங்கி வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கான ஆயுதங்கள், மருந்துகள் மற்றும் உணவுகளோடு போர்ப்பயிற்சியையும் ஈரான் வழங்கி வந்தது.
ஆனால் ஹமாஸ் வசமிருந்து தற்போது கைப்பற்றப்பட்டுள்ள ஆயுத தளவாடங்கள் மற்றும் உளவறியும் தகவல்தொடர்பு சாதனங்கள் ஆகியவை சீனாவின் தயாரிப்புகளாக இருப்பதை அறிந்து இஸ்ரேல் திடுக்கிட்டது. அது குறித்து பகிரங்கமாகவும் இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது. ஈரான் தேவைக்காக சீனா வழங்கிய ஆயுத தளவாடங்கள் ஹமாஸுக்கு வழங்கப்பட்டனவையா அல்லது சீனாவே நேரடியாக காஸா மீதான அக்கறையில், ஹமாஸுக்கு அவற்றை கையளித்திருக்கிறதா என்பது தெளிவாகவில்லை.
இந்த கேள்விகளுக்கு சீனா கடுமையாக எதிர்வினையாற்றி இருப்பது, இஸ்ரேலின் ஐயத்தை தீவிரமாக்கி உள்ளது. காசா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகள் அனைத்தும் அது குறிப்பிடும் ’தற்காப்பு எல்லைக்கு’ அப்பாற்பட்டது என சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யீ பதிலடி தந்துள்ளார். மேலும், காசாவில் பாலஸ்தீனியர்களை கொத்துக்கொத்தாக கொல்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். இஸ்ரேல் ஐயப்படி, காசா களத்தில் சீனாவின் கை இருப்பின் இஸ்ரேல் சபதமிட்ட போர் நடவடிக்கைகள், அத்தனை எளிதில் முடிவுற வாய்ப்பில்லை என்றே தெரியவருகிறது.