உக்ரைனுக்கு எதிராக போரிட்டால் வெகுமதியாக இது கிடைக்கும்’ரஷ்யா
06 Jan,2024
உக்ரைனுக்கு எதிரான தங்களது போரில் பங்கேற்க, வெளிநாட்டவருக்கு வலைவீசும் நெருக்கடிக்கு ரஷ்யா தள்ளப்பட்டிருக்கிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை மூன்றாம் ஆண்டில் நுழைய இருக்கிறது. ஒரு சில வாரங்களில் உக்ரைனை வீழ்த்திவிடுவோம் என்ற ரஷ்யாவின் கணிப்பில் மண் விழுந்திருக்கிறது. ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் போரால் பெரும் நெருக்கடிக்கு ரஷ்யா ஆளாகியுள்ளது. ரஷ்யா போன்ற வல்லரசு தேசத்துக்கு எதிரான போரை எதிர்கொள்வதற்கு எந்த பின்புலமும் இல்லாத உக்ரைன், மேற்கு நாடுகளின் அரவணைப்பால் ரஷ்யாவின் கண்ணில் விரலை விட்டிருக்கிறது.
லட்சத்துக்கும் மேலான ரஷ்ய வீரர்களை பலிகொண்டும், அங்கஹீனமாக்கியும் தொடரும் உக்ரைன் மீதான போர் தேவையா என ரஷ்யர்கள் பொரும ஆரம்பித்திருக்கிறார்கள். குடிமக்களின் அதிருப்தியை தணிக்க, எப்படியாவது இந்த ஆண்டின் முதல் பாதிக்குள் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா முடிவு செய்துள்ளது. மேலும், தொடர் தாக்குதல்களுக்கு அவசியமான ஆயுத தளவாடங்கள் இழப்பு மட்டுமன்றி, வீரர்களுக்கான தட்டுப்பாட்டையும் ரஷ்யா எதிர்கொண்டுள்ளது.
போரின் ஆரம்பம் தொட்டே வாக்னர் போன்ற கூலிப்படைகளை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது. போர்க்குற்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும்பொருட்டு, உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் திட்டமிட்டு கூலிப்படைகளை ரஷ்யா களமிறக்கி வந்தது. ஆனபோதும் அவற்றை பொதுவெளியில் மறுத்தும் வந்தது. வாக்னர் குழுவுடனான மோதலில் அவை அத்தனையும் வெளிச்சத்துக்கு வந்தன. வாக்னர் போலவே ஆப்பிரிக்கர்கள், கியூபா நாட்டினர், நேபாளிகள் என பல நாடுகளின் பின்னணியில் கூலிப்படைகளை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.
தற்போது அதற்கும் தட்டுப்பாடு எழவே, பகிரங்கமாக வெளி நாட்டினருக்கு அழைப்பு விடுக்க துவங்கியுள்ளது ரஷ்யா. இதன்படி உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்காக பங்கேற்போருக்கு, ரஷ்ய நாட்டின் குடியுரிமையை வழங்குவதாக அதிபர் புதின் அறிவித்திருந்தார். தற்போது அந்த அறிவிப்பை, போரிடும் நபரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நீடித்து ரஷ்யா அறிவித்துள்ளது. இதன் மூலம் உக்ரைனுக்கு எதிராக போரிடுவோர் ரஷ்ய குடிமகனுக்கான ஆதாயங்களை அடைவார்கள்.