தென் கொரியா மீது வடகொரியா தாக்குதல்! போர் மூளும் சூழலால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!
05 Jan,2024
தென்கொரியாவிற்கு சொந்தமான யோன்பியாங் தீவுப்பகுதிக்கு அருகில் வடகொரியா ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து தீவு பகுதியில் இருந்து உடனடியாக மக்கள் வெளியேற தென்கொரியா அரசு உத்தரவிட்டுள்ளது.
அணு ஆயுதம் தொடர்பாக வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனிடையே தென் கொரியாவுடன் அமெரிக்கா இணைந்து, கொரிய தீபகற்பத்தில் ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இது போன்ற செயல்கள் வட கொரியாவை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. இதனால் வட கொரியாவின் ஆயுத பலங்களை அதிகரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தென் கொரியாவுக்கு சொந்தமான எல்லைப் பகுதியில் உள்ள யோன்பியாங் தீவு பகுதியில் வட கொரியா இன்று திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. காலை 9 மணி முதல் 11 மணிக்குள் 200க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டு தாக்குதல் நடத்திய வட கொரியா ராக்கெட் தாக்குதலையும் நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தென்கொரியா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவு பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
தென் கொரியா மற்றும் அதன் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிரான போருக்கு தயாராக இருப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தென்கொரியா மீது இந்த நேரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் போர் மூளும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே ரஷ்யா - உக்ரைன் இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதேபோல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒரு பக்கம் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் கொரியா மீதான வட கொரியாவின் தாக்குதல் உலக நாடுகளை கவலை அடைய செய்துள்ளது.