ஜப்பானுக்கு தென்கொரியா கடும் கண்டனம்!
03 Jan,2024
சுனாமி எச்சரிக்கை அறிவிப்பின் போது, தங்கள் நாட்டின் ஆளுகைக்கு கீழுள்ள தீவுகளை ஜப்பான் சொந்தம் கொண்டாடும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
புத்தாண்டு தினத்தன்று, ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் அந்நாட்டில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், பல இடங்களில் கடல் அலைகள் தாக்கியதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி இதுவரை 45 பேர் உயிரிழந்திருப்பதாக ஜப்பான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் காரணமாக சாலைகள் சேதமடைந்திருப்பதோடு, கட்டிட இடுபாடுகளும் சாலைகளில் விழுந்து கிடக்கின்றன. இதனால், மீட்புப்படையினர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களுக்கு இதுவரை முழுமையாக மீட்புப்படையினர் சென்று சேரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனிடையே ஜப்பான் அரசு வெளியிட்டுள்ள சுனாமி எச்சரிக்கையின் போது, தங்கள் நாட்டின் பகுதிகள் எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவில் டோக்டோ எனவும் ஜப்பானில் டகேஷிமா எனவும் அழைக்கப்படும் இந்த குட்டித் தீவுகளை தங்கள் நாட்டின் பகுதி எனக் குறிப்பிடும்படி ஜப்பான் பதிவு வெளியிட்டுள்ளதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பேசிய தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லிம் சூ-சுக், இந்த தீவுகள் யாருடையது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும், ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் தவறு சரிப்படுத்திக்கொள்ள உடனடியாக ஜப்பான் அரசுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதே சமயம் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் நாடு கடந்த 1910-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை கொரிய தீபகற்பத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. அப்போது நிகழ்த்தப்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்களுக்காக சமீபத்தில் ஜப்பான் வருத்தம் தெரிவித்திருந்தது.
வடகொரியாவை இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு கடுமையாக எதிர்த்து வந்தாலும், தென்கொரியாவுடனான ஜப்பானின் உறவுகள் சமீப ஆண்டுகளாக மேம்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தீவுகள் விவகாரத்தில் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.