54 நாட்கள் இருட்டு அறையில் ” - ஹமாஸ் பிடியில் இருந்து மீண்ட இஸ்ரேல் பெண் தகவல்
03 Jan,2024
யாருடனும் பேச விடாமல் 54 நாட்கள் என்னை இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்தனர் என்று விடுவிக்கப்பட்ட இஸ்ரேல்-பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த டாட்டூன் பெண் கலைஞர் மியா ஸ்கெம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காசாவில் இயங்கி வரும் ஹமாஸ் படை இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து அந்த நாட்டை சேர்ந்தவர்கள், அங்கிருந்த வெளிநாட்டவர்கள் என சுமார் 240 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். 3 மாதங்களாக நடந்து வரும் இருநாட்டு போரில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், முதியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், போர் விதிகளை மீறி இஸ்ரேல் பாஸ்பரஸ் குண்டுகளை வைத்து காசாவின் பல்வேறுபகுதிகளைத் தாக்கியது. காசாவில்உள்ள அகதிகள் முகாம்கள், மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள்என எந்த பகுதியையும் விட்டுவைக்காமல் அடைக்கலம் புகுந்தவர்கள், காயமடைந்தவர்கள், நோயாளிகளையும் இஸ்ரேல் தாக்கியது, சர்வதேச அளவில்அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்தாக்குதலால் காசா பகுதியே சின்னாபின்னமாகி உள்ளது.
இந்நிலையில் ஹமாஸ் படையினர் பிடித்துச் சென்ற 240 பேரில்இஸ்ரேல்-பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த 21 வயதான பெண் டாட்டூகலைஞர் மியா ஸ்கெம்மும் ஒருவர்.இவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் 54 நாட்களாக இருட்டு அறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். என்னைத் தொடர்ந்து கண்காணித்தனர். அங்கு பேசுவதற்கு அனுமதி இல்லை. யாரையும் பார்க்கவும் முடியாது. எதையும் கேட்கவும் முடியாது. என்னை அடைத்து வைத்திருந்த நபரின் அறையில்தான் நான் இருந்தேன். அந்த அறைக்கு அருகில் உள்ள அறையில் அவரது மனைவி,குழந்தைகள் இருந்தனர். அதனால்தான் அந்த நபர், என்னை பாலியல் வன்கொடுமை செய்யவில்லை.
எந்த நேரத்திலும் நான் கொல்லப்படுவேன் என்ற மரண பயம் எனக்கு இருந்தது. என்னை தொடர்ந்து கண்காணித்து வந்ததால், அந்தநபரின் கண்களாலேயே நான் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவேன் என்ற படுமோசமான உணர்வு எனக்கு இருந்தது. கண்ணில் எப்போதும் எனக்கு சாவு பயம் இருந்தது. 54 நாட்களும் அங்கு பயத்துடனேயே அங்கு இருந்தேன்.
ஒரு கட்டத்தில் என்னை சிறைபிடித்த நபர், தன்னுடைய மனைவியை காதலிக்கவில்லை என்று என்னிடம் சொன்னார். ஒருவழியாக நான் விடுவிக்கப்பட்டேன். வெளியே தப்பி வந்தது கனவு போல இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.