காஸா சுரங்கக் குழிக்குள் 5 பிணைக்கைதிகளின் சடலம்,அதிர்ச்சி .
25 Dec,2023
.
காஸாவில் ஹமாஸ் அமைத்த சுரங்கக் குழியிலிருந்து 5 பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
.
கடந்த அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காஸாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது திடீர் போர் தாக்குதல் தொடுத்தது. அதைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,140 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அக்.7-ம் தேதி நடைபெற்ற தாக்குதலின்போது, இஸ்ரேலிலிருந்து 250-க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ராணுவத்தினர் பிணைக்கைதிகளாக பிடித்ததாகவும், அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிணைக் கைதிகளில் 105 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலின் பதில் தாக்குதலில் ஹமாஸ் பிடியிலிருந்த பிணைக் கைதிகள் பலர் இறந்துவிட்டதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம், எக்ஸ் வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், "அக்டோபர் 7-ம் தேதி பிணைக் கைதிகளாக கடத்தப்பட்டவர்களில், 5 பேரின் சடலங்கள், ஹமாஸ் பதுங்கு குழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அவர்களின் சடலங்களை இஸ்ரேல் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறந்தவர்களின் பெயர், சடலங்கள் மீட்கப்பட்ட பதுங்கு குழியின் வீடியோவை ஆகியவற்றையும் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
இதேபோல், ஹமாஸை நிர்மூலமாக்க, இஸ்ரேல் வான் வழியாகவும், தரை வழியாகவும் பதில் தாக்குதல் நடத்தியது. இதில், ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்பட 20,424 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தீவிரமாக இயங்கும் பகுதியில் உள்ள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.