படுகொலையாகும் அப்பாவி பாலஸ்தீனியர்; தாமதமாகும் பிணைக்கைதிகள் மீட்பு
24 Dec,2023
போரில் கொல்லப்படும் பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் இஸ்ரேல் பிணைக்கைதிகள் மீட்பில் ஏற்படும் தாமதம் என இரட்டை நெருக்கடிகளுக்கு இஸ்ரேல் ஆளாகி உள்ளது.
ஹமாஸ் ஆயுதக்குழுக்களை முழுவதுமாக அழித்தொழித்த பின்னரே இஸ்ரேல் படைகளை காசாவிலிருந்து திரும்பப்பெறுவோம் என்பதில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் விலை அதிகமாகி வருகிறது.
ஹமாஸ் மறைவிடங்களை தகர்ப்பது மற்றும் சந்தேகத்தின் பெயரிலான வேட்டை ஆகியவற்றால், கொல்லப்படும் அப்பாவி பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை உயருகிறது. இது சர்வதேசளவில் இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. ஞாயிறு நிலவரப்படி மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்க்குதலில் 201 அப்பாவி பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் குண்டு வீசியதில் அந்த ஓரிடத்தில் மட்டும் 90 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஒட்டுமொத்தக் குடும்பமாக இறந்துள்ளனர். இவை தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாவது, இஸ்ரேல் ராணுவத்துக்கு பின்னடைவாக மாறியுள்ளது. இந்த காசா களேபரங்களுக்கு அப்பால், சொந்த நாட்டிலும் நெதன்யாகுவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் வசமிருக்கும் இஸ்ரேலிய பிணைக்கைதிகள் மீட்பில் இழபறி தொடர்ந்து வருகிறது. பிணைக்கைதிகள் மீட்பில் தாமதம் செய்வதாக நெதன்யாகு அரசுக்கு எதிராக, பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானோர் நெருக்கடி தந்து வருகின்றனர். அதிக சேதம் கண்டுள்ள ஹமாஸ் குழுவை பொறுத்தளவில், போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிக்கப்பட்ட போதும், இஸ்ரேல் பிடிவாதமாக போரைத் தொடர்ந்து வருகிறது.