ஆங்கிலக்கால்வாயில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்து
15 Dec,2023
பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கி ஆங்கிலக்கால்வாயில் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான பரிதாப சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நேற்றிரவு பிரான்சிலிருந்து பிரித்தானியா நோக்கி சிறுபடகொன்று புறப்பட்டுள்ளது. அதில் 66 புலம்பெயர்ந்தோர் இருந்துள்ளனர்.
பிரெஞ்சுக் கரையிலிருந்து 8 கிலோமீற்றர் சென்ற நிலையில் படகில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு படகு கவிழ்ந்துள்ளது.
தகவலறிந்து பிரான்ஸ் கடலோரக் காவற்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
நள்ளிரவு 1.15 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த பிரான்ஸ் கடலோரக் காவற்படையினர், தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் இருவர் சுயநினைவின்றி இருக்கவே, அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டிருக்கிறார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மற்றொருவர் ஹெலிகொப்டர் மூலம் பிரான்சில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மற்றவர்களும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், வேறு யாரேனும் தண்ணீரில் சிக்கியுள்ளார்களா என்பதை அறிவதற்காக ஆகாய மார்க்கமாகவும், படகுகள் மூலமும் தொடர்ந்து கடலோரக் காவற்படையினர் தேடிவருகிறார்கள்.