ஹமாசின் கடைசி கோட்டையை சுற்றிவளைத்தது இஸ்ரேல் போர் முடிவுக்கு வருமா?
12 Dec,2023
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், இடையில் சில நாட்கள் மட்டும் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்த பின்னர் மீண்டும் காசாவை நோக்கி இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் அளித்த பேட்டியில், ‘ஹமாசுக்கு எதிரான போர், அதன் இலக்குகளை அடைந்தவுடன் முடிவுக்கு வரும். விரைவில் அது நடக்கும். வடக்கு காசாவில் ஹமாசின் கோட்டையாக கருதப்படும் ஜபாலியா, ஷேஜாயா பகுதியை சுற்றி வளைத்துள்ளோம். கடந்த சில நாட்களில் மட்டும் நூற்றுக்கணக்கான ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் படைகளிடம் சரணடைந்துள்ளனர்.
இதன்மூலம் ஹமாசின் பலம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அவர்கள் தங்களை யாரும் வெல்ல முடியாது என்று நினைத்தார்கள். பல ஆண்டுகளாக எங்களுக்கு எதிராக போர் தொடுத்து வந்தனர். தற்போது முழுவதுமாக அழிந்து வருகின்றனர். எங்களிடம் சரணடைவோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது. கடந்த மாதம் மட்டும் காசா பகுதியில் சுமார் 500 ஹமாஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். ஹமாசால் சிறைவைக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
காசாவிற்கு உதவ வாருங்கள்: காசாவில் இஸ்ரேல் படையினர் கடந்த அக். 7ம் தேதி முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியது. இந்தப் போரில் 49,645 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து காசா சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஷ்ரஃப் அல்-கத்ரா கூறுகையில், ‘உலகம் முழுவதுமிருக்கும் மருத்துவக் குழுக்கள் உடனடியாக காசா விரைந்து வந்து, அங்கு சிகிச்சைக்காகக் காத்திருப்பர்களுக்கு உதவ வேண்டும். நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற காசாவிலிருந்து வெளியேற தயாராக இருக்கிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 297 பேர் உயிரிழந்தனர்; 550க்கும் மேற்பட்டோர் காசாவில் காயமடைந்தன’ என்றார். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ‘காசாவுக்குள் நடைபெற்று வரும் ராணுவ நடவடிக்கைகளின்போது இதுவரை 104 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இது தவிர, காசாவில் 582 வீரர்கள் காயமடைந்துள்ளனர். கடந்த அக். 7ம் தேதிக்குப் பிறகு இதுவரை 433 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; 1,645 வீரர்கள் காயமடைந்துள்ளனர்’ என்றார்.