மனிதாபிமான உதவி பொருட்களை காசா மக்களிடம் பறிக்கும் ஹமாஸ்: வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்
10 Dec,2023
.
காசா: காசா மக்களுக்கு கொடுக்கப்பட்ட மனிதாபிமான உதவிப் ெபாருட்களை ஹமாஸ் அமைப்பினர் பறித்து செல்லும் வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. கத்தார் நாட்டின் மத்தியஸ்ததால், சில நாட்கள் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. அப்போது ஹமாசால் பிடித்து வைக்கப்பட்ட பணயக்கைதிகள், இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட சிலர் விடுவிக்கப்பட்டனர்.
அதன்பின் ஹமாசின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை தொடர்ந்தது. இதற்கிடையில், ஹமாஸ் தீவிரவாதிகள் காசா மக்களை தாக்கியதாகவும், சர்வதேச அமைப்புகளிடமிருந்து காசாவிற்கு வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளை திருடுவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், காசா மக்களை சரமாரியாக தாக்குகின்றனர்.
இஸ்ரேல் மற்றும் சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட மனிதாபிமான உதவி பொருட்களை மக்களிடம் இருந்து அந்த கும்பல் பறித்து செல்கிறது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட மற்றொரு பதிவில்,
ஹமாஸ் அமைப்பின் ஜபாலியா பட்டாலியன் பிரிவை சேர்ந்தவர்கள் இஸ்ரேல் படை முன் சரணடைந்தனர் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
.
அந்தப் படத்தில் சரணடைந்தவர்கள் அரை நிர்வாண முறையில் காணப்பட்டனர். இவை தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.