உலக நாடுகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த ஹூத்திகள்
10 Dec,2023
இஸ்ரேலுக்குச் செல்லும் அனைத்து கப்பல்களையும் அவர்கள் எந்த நாட்டவர்கள் என்பதை பொருட்படுத்தாமல் குறிவைக்க இருப்பதாக யேமனின் ஹுத்தி இயக்கம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் இஸ்ரேலிய துறைமுகங்களை பயன்படுத்துவதற்கு எதிராகவும் அனைத்து சர்வதேச கப்பல் நிறுவனங்களையும் ஹுத்தி இயக்கம் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்துவரும் மிக மோசமான போருக்கு மத்தியில் ஈரான் ஆதரவு ஹுத்திகளால் மத்திய கிழக்கில் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீப நாட்களில் செங்கடல் மற்றும் அதன் பாப் அல்-மண்டப் ஜலசந்தியில் இஸ்ரேலுடன் தொடர்புடைய பல கப்பல்களை ஹுத்திகள் தாக்கி கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே, பலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தான் தங்களின் நடவடிக்கைகள் இருப்பதாக ஹுத்தி தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், கப்பல்கள் மீதான தாக்குதலானது ஈரான் முன்னெடுக்கும் பயங்கரவாதம் என குறிப்பிட்டுள்ள இஸ்ரேல், சர்வதேச கடல் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எனவும் தெரிவித்துள்ளது.
உடனடி நடைமுறை
இது குறித்து ஹுத்தி தரப்பு தெரிவிக்கையில், நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படும் வரையில் இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு செல்லும் அனைத்து கப்பல்களும் செங்கடல் மற்றும் அரபிக்கடலில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.
மேலும், காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகள் கிடைக்கவில்லை என்றால் செங்கடல் ஊடாக இஸ்ரேலிய துறைமுகங்களுக்குச் செல்லும் அனைத்து கப்பல்களும், எந்த நாட்டினராக இருந்தாலும், தங்களது ஆயுதப் படைகளுக்கு இலக்காகிவிடும் என ஹுத்தி தரப்பு அறிக்கை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளது.
அத்துடன், தங்களின் இந்த முடிவு உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.