ரஷ்ய வைரங்கள் இறக்குமதி செய்ய தடை: ஜி 7 நாடுகள் திடீர் முடிவு!
09 Dec,2023
ரஷ்ய வைரங்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்க ஜி 7 (G7) நாடுகள் முடிவு செய்துள்ளன. நேற்று நடைபெற்ற இணைய வழியிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் நடத்திவரும் ரஷ்யாவின் நிதி சேகரிப்பைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இருந்து வைரம் இறக்குமதிக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படும். மார்ச் 1 முதல் மற்ற நாடுகளில் பதப்படுத்தப்பட்ட ரஷ்ய வைரங்களும் இந்த தடையில் சேர்க்கப்படும்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கலந்து கொண்ட மெய்நிகர் உச்சி மாநாட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்ட ஜி 7 அறிக்கை, ரஷ்யாவில் வெட்டியெடுக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்படும் தொழில்துறை அல்லாத வைரங்கள் மீதான முதல்கட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியது.
அதே நேரத்தில், வைர உற்பத்தி நாடுகள் மற்றும் முன்னணி பிராண்ட்கள் ஜி 7 நாடுகளின் இந்த முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஜி 7 அமைப்பின் தலைவராக இருக்கும் ஜப்பானின் பிரதமர், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் மீட்பு முயற்சிகளுக்கு உதவுவதற்காக சுமார் 4.5 பில்லியன் டாலர் கூடுதல் நிதியை வழங்கத் தயாராக இருப்பதாக உச்சிமாநாட்டில் தெரிவித்தார்.
ஜி 7 அமைப்பில் இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் ரஷ்யாவில் இருந்து வைரங்களை இறக்குமதி செய்வது நிறுத்தியுள்ளதால் ரஷ்யாவுக்கு வைரம் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்படும்.