அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு,4 பேர் உயிரிழப்பு!
07 Dec,2023
லாஸ்வேகாஸ் நகரில் உள்ள நெவேடா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ள நிலையில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதும் அதனால், பலர் உயிரிழப்பதும் வாடிக்கையாக உள்ளது. டெக்ஸாஸ் மாகாணத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மற்றுமொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நேற்று இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிச் சூடு குறித்து தகவல் அறிந்த லாஸ்வேகாஸ் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி வளாகத்தில் இருந்த மாணவர்களை உடனடியாக வெளியேற்றினர். அதன் பிறகு சம்பவ இடத்தை ஆராய்ந்த போது 3 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இறந்துகிடந்ததும் தெரிய வந்தது. அங்கு படுகாயமடைந்த நிலையில் இருந்த ஒருவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது காவல்துறையினரால் சுடப்பட்டாரா என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த சம்பவத்தை அடுத்து, நெவாடா பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து தெற்கு நெவாடா பகுதி நிறுவனங்களும் நேற்று முழுவதும் மூட உத்தரவிடப்பட்டது. நிறுவனம் அருகே உள்ள சாலைகளையும் போலீசார் மூடினர். UNLV பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 25,000 இளநிலை மாணவர்கள் மற்றும் 8,000 முதுகலை பட்டதாரிகள் பயின்று வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.