இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் மேலும் நீடிக்க வாய்ப்பு... கூடுதல் பிணைக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு
29 Nov,2023
.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம், கூடுதல் பிணைக்கைதிகள் மற்றும் சிறைக்கைதிகளை விடுவிக்கும் நோக்கில், நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிய வருகிறது.
4 நாள் தற்காலிக போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டதில், அந்த 6 நாள் அவகாசம் புதன் கிழமையோடு நிறைவடைகிறது. இதனிடையே, ஹமாஸ் தரப்பிலிருந்து கூடுதல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் நோக்கில், போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க புதிய முடிவு எட்டப்பட உள்ளதாக தெரிகிறது.
ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகள் நேற்றைய தினம் 12 பிணைக்கைதிகளை விடுவித்தன. இதன் மூலம் போர் நிறுத்தம் தொடங்கிய வெள்ளிக்கிழமையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகளின் எண்ணிக்கை 81 என்பதாக உயர்ந்துள்ளது. போர் நிறுத்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 180-ஆக உயர்ந்தது.
.
கத்தார் முன்னிலையில் முன்னதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தினத்துக்கு குறைந்தது 10 இஸ்ரேலிய பிணைக்கைதிகளையாவது ஹமாஸ் விடுவித்தால், போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியது. ஆனால் ஹமாஸ் வசம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அப்பால், கணிசமான ஆண்கள் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை விடுவிப்பதில் தயக்கம் தென்படுகிறது.
அக்.7 அன்று இஸ்ரேலில் புகுந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர், அங்கிருந்து 240 நபர்களை காசாவுக்கு கடத்திச் சென்றனர். இவர்களில் இருந்து தவணை முறையில் பிணைக்கைதிகள் விடுவிப்பு நடைபெற்று வருகிறது. அக்.7 ஹமாஸ் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. பழிவாங்கல் நடவடிக்கையாக காசா மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் 15,000க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
.
விடுவிக்கப்பட்டோர் தவிர்த்து காசாவில் சுமார் 159 பிணைக்கைதிகள் இன்னமும் உள்ளனர். இவர்களில் சுமார் 9 அமெரிக்கர்களும் இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பிணைக்கைதிகள் விடுவிப்பில் அமெரிக்கர்களுக்கு முக்கியத்துவம் தருமாறு அமெரிக்காவின் தரப்பில் அழுத்தம் தரப்பட்டு வருகிறது. இதன் பொருட்டும் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதில் அமெரிக்கா கூடுதல் அக்கறை காட்டி வருகிறது.