தென்கொரியா எல்லையில் படைகளை குவிக்கும் வட கொரியா
28 Nov,2023
¨'
சியோல்: தென்கொரிய எல்லைகளில் வடகொரியா ராணுவத்தை குவித்து வருகிறது. வட-தென் கொரியா நாடுகள் எல்லையில் ராணுவ மோதல்களை தவிர்க்க கடந்த 2018ம் ஆண்டு நல்லிணக்க ஒப்பந்தம் செய்து கொண்டன. அதன்படி இரு தரப்பிலும் அவற்றின் பலத்த பாதுகாப்பு எல்லைக்குள் இருந்த தலா 11 எல்லை பாதுகாப்பு நிலைகளை அகற்றின.
இதனிடையே, வட கொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியதாக கடந்த 21ம் தேதி அறிவித்தது. இது இரு நாடுகளிடையே மீண்டும் பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், உளவு செயற்கைக்கோள் ஏவியது தொடர்பான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வட-தென் கொரிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவின் போது எல்லைகளில் இருந்து அகற்றப்பட்ட எல்லை பாதுகாப்பு நிலைகளை வடகொரியா மீண்டும் நிறுவி வருவதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
இதையடுத்து, மேற்கூறிய ஒப்பந்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்வதாகவும் வடகொரியா உளவு செயற்கைகோள் அனுப்பிய நிலையில், பதிலுக்கு எல்லைகளில் வான்வழி கண்காணிப்பை மீண்டும் தொடங்குவதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.இரண்டு கொரிய நாடுகளும் ஒப்பந்தத்தை மீறுவதாக பகிரங்கமாக அச்சுறுத்துவதால், இந்த ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ளது.