பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் நிபந்தனை
27 Nov,2023
இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் உள்ள அனைத்து பலஸ்தீனியர்களையும் விடுவிக்கும் பட்சத்தில் தம் வசமுள்ள அனைத்து பணய கைதிகளையும் விடுவிப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ்சிற்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாட்டிற்கு அமைய மூன்றாம் கட்டமாக பணய கைதிகளும் பலஸ்தீன சிறைக்கைதிகளும் பரிமாற்றப்படவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காசாவில் யுத்த நிறுத்தம் தொடர்ந்தும் கடைபிடிக்கின்ற போதிலும், மேற்கு கரையில் இஸ்ரேலிய படையினரின் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சுற்றிவளைப்புக்களில் குறைந்தது ஆறு பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கடந்த மாதம் முதல் மேற்கு கரையில் இஸ்ரேலின் சுற்றிவளைப்புக்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 237 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பலஸ்தீன மக்களை இல்லாதொழிக்கும் மற்றும் குடியேற்றங்களை விரிவுபடுத்தும் நோக்குடன் இஸ்ரேலின் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக பலஸ்தீன இஸ்லாமிய ஹிகாத் அமைப்பு கூறியுள்ளது.
அனைத்து இடங்களிலும் இஸ்ரேலின் போரை எதிர்கொள்வதற்கு தாயாராக உள்ளதாகவும் தமது மக்கள் சரண் அடைய மாட்டார்கள் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
தம்மிடம் உள்ள அனைத்தையும் கொண்டு இஸ்ரேலின் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவோம் எனவும் கடந்த 24 மணித்தியாலத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலஸ்தீன ஹிகாத் அமைப்பு கூறியுள்ளது.
இந்த நிலையில் ஹமாஸ் இயக்கத்தினால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியர்கள் ரெல் அவீவிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.