இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனர்கள் நிம்மதியாக வாழ்வதை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை - பைடன் கோபம்!
26 Nov,2023
இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் அருகருகே நிம்மதியாக வாழ்வதை ஏற்றுக்கொள்ளாத ஹமாஸ்தான் இந்த தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, கத்தார் நாடு இரு தரப்பிடமும் நடத்திய பேச்சுவார்த்தையில், நான்கு நாள்கள் போர் இடைநிறுத்த ஒப்பந்தத்தின்பேரில், 50 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸும், 150 பாலஸ்தீன சிறைவாசிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மேற்குக் கரையிலுள்ள ரமல்லாவுக்கு அருகே பெய்துனியா சோதனைச்சாவடியில் விடுவிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து ஹமாஸ், 13 இஸ்ரேலியர்கள் உட்பட 24 பிணைக் கைதிகளை விடுவித்திருக்கிறது. அவர்கள் எகிப்து வழியாக இஸ்ரேலை அடைந்துள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் உள்ள நன்டக்கெட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 24 பிணைக்கைதிகளை விடுவித்ததை வரவேற்கிறேன். இது ஒரு நேர்மறையான தொடக்கம்.
ஹமாஸ் குழு இந்த நம்பிக்கையைச் சரியாகக் காப்பாற்றும் என்று தோன்றவில்லை. இது ஆரம்பம் மட்டுமே... ஆனால், இதுவரை, நன்றாகவே அனைத்தும் நடந்திருக்கிறது. தற்போது உலகளவில் ஹமாஸ் குழுவுக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தங்களுக்கு, இந்த விடுவிப்பின் மூலம் பதிலளிப்பதாக மட்டுமே நான் நம்புகிறேன். இன்று விடுவிக்கப்பட்டவர்களில் ஹமாஸிடம் பிணைக்கைதிகளாக இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மூன்று அமெரிக்கக் குடிமக்களும் இருப்பார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்களை மீட்டு அவர்களின் குடும்பத்தாருடன் நிச்சயம் சேர்ப்பேன். இன்று விடுவிக்கப்படும் இரண்டாவது பிணைக்கைதிகளின் பட்டியலில் மூன்று அமெரிக்கக் குடிமக்களின் பெயர்கள் குறிப்பிடப்படும் என்றே கருதுகிறேன். இவர்களைத் தவிரக் கணக்கில் வராத 10 அமெரிக்கர்களின் கதி, அவர்களின் நிலைமைகள் குறித்து எங்களுக்குத் எந்தத் தகவலும் தெரியவில்லை.
நீண்டகால அடிப்படையில் மத்தியக் கிழக்கில் அமைதியை ஏற்படுத்த இரு நாடுகளின் ஒத்துழைப்புத் தீர்வு தேவை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும் அருகருகே வாழக்கூடிய வாழ்வைத் தொடர வேண்டும். இரண்டு நாடுகளுக்கும் சம அளவு சுதந்திரம், கண்ணியத்துடன் தீர்வு காணவேண்டும். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் அருகருகே நிம்மதியாக வாழ்வதை ஏற்றுக்கொள்ளாத ஹமாஸ்தான் இந்த தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது" எனத் தெரிவித்தார்.