துரோகிகளுக்கு தூக்குத் தண்டனை.காசா பாலஸ்தீனியர் போராட்டத்தின் மறுபக்கம்
25 Nov,2023
காசாவில் ஹமாஸ் உள்ளிட்ட போராளி குழுவினர் சக பாலஸ்தீனியர்கள் மூவரை, பொது இடத்தில் தூக்கிலிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அக்.7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் தாக்குதலை அடுத்து, அவர்களுக்கு எதிரான முழுப் போரை இஸ்ரேல் தொடங்கியது. காசாவில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை கொல்வது மற்றும் அவர்கள் வசமிருக்கும் பிணைக் கைதிகளை விடுவிப்பது என 2 பிரதான நோக்கங்களுடன் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தங்கள் தாக்குதல்களை தொடங்கினர். ஆனால், வான்படைகள் மூலம் குண்டுகளை வீசி காசாவை சிதைத்ததோடு, அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கொன்றனர்.
இவற்றினூடே, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாதி உள்ளிட்ட பாலஸ்தீனிய விடுதலைக் குழுக்களின் தளபதிகள் மீது துல்லியத் தாக்குதல்களை இஸ்ரேல் படைகள் மேற்கொண்டன. சர்வதேச நாடுகள் ஆச்சரியப்படும் வகையில், இஸ்ரேலின் துல்லியத் தாக்குதல்களில் இந்த ஹமாஸ் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில், இஸ்ரேல் உளவாளிகளான மொசாட் ஏஜெண்டுகளிடம் விலைபோன பாலஸ்தீனர்களே காரணம் எனத் தெரிய வந்தது.
இதனையடுத்து, ஒரு பக்கம் இஸ்ரேல் படைகளுடன் போரடியபடி, தங்கள் மத்தியிலான துரோகிகளை அடையாளம் காணும் பணிகளை பாலஸ்தீன ஆயுதக் குழுக்கள் மேற்கொண்டன. இந்த நடவடிக்கையின் முடிவில் 3 பாலஸ்தீனியர்கள் ’துரோகிகள்’ என அடையாளம் காணப்பட்டனர். விசாரணையில் இஸ்ரேல் ஏஜெண்டுகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு உளவுத் தகவல்களை தெரிவித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
பின்னர், காசா மேற்கு கரை பகுதியில், மக்கள் திரள் கூட்டத்தின் மத்தியில் மின்சார கம்பங்களில் 3 பாலஸ்தீனியர்களையும் ஹமாஸ் குழுவினர் தூக்கிலிட்டனர். சுற்றியிருந்த மக்கள், தூக்கிலிடப்பட்டவர்கள் மீது கற்களை வீசி தங்கள் ஆவேசத்தை தணித்துக்கொண்டனர். தற்காலிக போர் நிறுத்தத்தின் முதல் நாளில் பரஸ்பரம் கைதிகள் பரிமாற்றத்தின்போது, மேற்கு ஊடகங்கள் இந்த தகவல்களை சேகரித்து வெளியிட்டுள்ளனர்.