அமெரிக்க தளங்களை குறிவைக்கும் கிம் ஜாங் ..?
23 Nov,2023
தங்களது உளவு செயற்கைக்கோள் வாயிலாக அமெரிக்காவின் ராணுவ தளங்களை அதிபர் கிம் ஜாங் உன் கண்காணித்து வருவதாக, வட கொரியா வெளியிட்டுள்ள தகவலை நம்புவதா வேண்டாமா என உலக நாடுகள் திகைப்பில் ஆழ்ந்துள்ளன.
வட கொரியா தனது உளவு செயற்கைகோளை ஏவியதோடு, புவியின் சுற்றுவட்டப் பாதையில் அதனை நிலை நிறுத்தியதாக முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால், வடகொரியாவின் சகல நகர்வுகளையும் உற்று கவனித்து வரும், தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளால், இதனை உறுதிப்படுத்த இயலவில்லை. அல்லது அது தொடர்பாக இந்த நாடுகள் வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை.
இவற்றின் மத்தியில், சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட செயற்கைக்கோள் செயல்படத் தொடங்கிவிட்டதாகவும், அது அமெரிக்காவின் ஆன்டர்சன் விமானப்படை தளம், அப்ரா துறைமுகம் மற்றும் இதர முக்கிய ராணுவ தளங்களின் புகைப்படங்களை அனுப்பி வருவதாகவும் வட கொரியா தெரிவித்துள்ளது. இந்த புகைப்படங்களை அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிட்டு, ஆராய்ந்து வருவதாகவும் வட கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் இந்த வாக்குமூலத்தை சற்றே திகிலுடன் பிராந்திய பகை நாடுகள் கவனித்து வருகின்றன. உளவு செயற்கைக்கோளினை ஏவும் வடகொரியாவின் முயற்சிகள் 2 முறை தோற்றிருக்கின்றன. அவற்றை வடகொரியாவும் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டது. செயற்கைக்கொளுடன் ஏவப்பட்ட ராக்கெட்டுகள், எதிர்பாரா வகையிலான எஞ்சின் பழுது காரணமாக கடலில் விழுந்ததாகவும் அறிவித்திருந்தது. இப்படி உண்மை விளம்பியான வட கொரியா, இம்முறை சொல்வது உண்மையா அல்லது பொய்யா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
உளவு செயற்கைக்கோள் ஏவும் வடகொரியாவின் மூன்றாவது முயற்சியை அண்டை தேசமும் பகையாளியுமான தென்கொரியா உன்னிப்பாக கண்காணித்து வந்தது. தென் கொரியா மட்டுமன்றி, உலகின் இண்டு இடுக்கெல்லாம் தனது கண்காணிப்பில் வைத்திருக்கும் பெரியண்ணன் அமெரிக்காவின் கண்காணிப்பையும் மீறி வட கொரியா உளவு செயற்கைக்கோளை சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தியது எப்படி என்றும், வட கொரியா சொல்வதில் உண்மை எத்தனை சதவீதம் என்றும் உலக நாடுகள் குழம்பிப் போயுள்ளன.