ஏமன் கிளர்ச்சியாளர்கள் கைவரிசை, செங்கடல் வழியாக இந்தியா வந்த சரக்கு கப்பல் கடத்தல்: 25 பேர் பிணைக்கைதிகளாக பிடிப்பு
20 Nov,2023
ஜெருசலம்: துருக்கியில் இருந்து குஜராத் பிபாவாவ் துறைமுகம் நோக்கி வந்த கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பல் செங்கடல் பகுதியில் ஏமன் நாட்டு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டது. கப்பலில் இருந்த மாலுமிகள் உள்ளிட்ட 25 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவு அதிபர், ஷியா பிரிவின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இடையே கடந்த 2015ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடக்கிறது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் மதியம் இஸ்ரேல் தொழிலதிபருக்கு சொந்தமான கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பல் செங்கடல் வழியாக குஜராத் பிபாவாவ் துறைமுகம் நோக்கி வந்தது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் கப்பலின் மேல்தளத்தில் இறங்கிய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கப்பலை கைப்பற்றி அதிலிருந்த 25 பேரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.
இது பற்றி ஹவுத்தி செய்தி தொடர்பாளர் முகமது அப்துல் சலாம் வெளியிட்ட அறிக்கையில், ‘இஸ்ரேல் தொடர்பு காரணமாக கப்பலை சிறைப்பிடித்தோம். காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நிறுத்தப்படும் வரை கடல் பகுதியில் இஸ்ரேல் கப்பல் அல்லது இஸ்ரேல் வர்த்தக தொடர்புள்ள கப்பல் எதுவானாலும் அதை தாக்குவோம். இஸ்ரேலியர்களுக்கு அடக்குமுறை தான் புரியும். இந்த கப்பலை பிணையாக பிடித்துவைத்திருப்பது போரில் எங்களை இணைத்துக் கொண்டதன் தீவிரத்தை உணர்த்தும். என்ன விலை கொடுத்தாவது கடல்பரப்பில் இந்த போரை மேற்கொள்வோம். இது வெறும் ஆரம்பம்தான். பிணைக்கைதிகள் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்படுவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கடத்தல் குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்த கண்டன குறிப்பில், ‘ஹவுத்திகள் இஸ்ரேலியருக்கு சொந்தமான கப்பலை சிறைப்பிடித்துள்ளனர். அதில் உள்ள 25 பேரில் ஒருவர் கூட இஸ்ரேலியர் இல்லை. பிலிப்பைன்ஸ், பல்கேரியா, ருமேனியா, மெக்சிகோ, உக்ரைன் என பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ள கப்பலை கடத்தி ஏமன் மிகப்பெரிய சர்வதேச குற்றம் புரிந்து, உலக நாடுகளின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. இது ஈரான் பயங்கரவாதத்தின் வெளிப்பாடு’ என்று தெரிவித்தது. கப்பலை ஜப்பான் நிறுவன இயக்கும் நிலையில், ஜப்பான் அரசும் பிடிபட்டவர்களை விரைவில் விடுவிக்க முயற்சிகளை செய்யும் என்று தெரிவித்துள்ளது.