6 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்கா செல்கின்றார் சீன ஜனாதிபதி !
16 Nov,2023
6 ஆண்டுகளுக்கு பின்னர் தனது முதல் பயணமாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
21 உறுப்பினர்களைக் கொண்ட ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டத்தின் ஒருபகுதியாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இரு நாடுகளும் விரிசல் அடைந்த உறவுகளை மீட்டெடுக்கும் முகமாக சீன ஜனாதிபதி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிற்கு முதல்முறையாக விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு குறித்த மேலதிக தகவல்களை உரிய நேரத்தில் சீன வெளிவிவகார அமைச்சு வெளியிடும் என வொஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் கூறியுள்ளது.
வர்த்தகம், தாய்வான் மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடி போன்ற பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேநேரம் இருதரப்பு பேச்சுவார்த்தையில் தனது இலக்கு பெய்ஜிங்குடன் இராணுவம் தொடர்புகள் உட்பட சாதாரண தொடர்புகளை மீட்டெடுப்பதே நோக்கம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருந்தார்.
பிரான்சிஸ்கோவிற்குச் செல்வதற்கு முன்பு வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவுடன் நல்லுறவை பேணுவதே முக்கிய குறிக்கோள் என்றும் தெரிவித்திருந்தார்.
வர்த்தகம் முதல் மனித உரிமைகள் மற்றும் கொரோனா தொற்று தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்த நிலையில் இந்த சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
இறுதியாக 2017ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சீன ஜனாதிபதி சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.