சுரங்கம் அமைத்து ஹமாஸ் பதுங்கியிருப்பதாக மருத்துவமனைகளை தகர்க்க தயாராகிறது இஸ்ரேல்
15 Nov,2023
மருத்துவமனை கட்டிடங்களுக்கு அடியில் ரகசிய சுரங்கம் அமைத்து ஹமாஸ் படையினர் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இவற்றை ஹமாஸ் மறுத்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் படையினருக்கு இடையேயான போர் ஒரு மாதத்தை தாண்டி நீடிக்கிறது. வடக்கு காசாவில் தரை வழி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல், அங்கு எஞ்சியிருக்கும் மக்களை தெற்கு காசா நோக்கி செல்ல தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஏற்கனவே 8 லட்சம் பேர் தெற்கு பகுதிக்கு இடம் பெயர்ந்த நிலையில், கடந்த 10 நாட்களில் மேலும் 2 லட்சம் பேர் வடக்கு காசாவில் இருந்து வெளியேறி உள்ளனர்.
இதற்கிடையே, வடக்கு காசாவில் குடியிருப்பு கட்டிடங்கள் அனைத்தையும் தரைமட்டமாக்கிய இஸ்ரேல் ராணுவம் தற்போது மருத்துவமனைகளை குறிவைத்துள்ளது. சர்வதேச போர் விதிகளின்படி பாதுகாக்க வேண்டிய பகுதிகளில் மருத்துவமனைகள் முக்கியமானவை. ஆனால், வடக்கு காசாவில் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபா உட்பட அனைத்து மருத்துவமனைகளுக்கு வெளியிலும் இஸ்ரேல் பீரங்கிகள் தாக்குதலுக்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபாவில் 650 நோயபாளிகள், 500 மருத்துவ பணியாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். அங்கிருப்பவர்கள், பின்பக்க தலையில் கைவைத்து வெளியில் வந்து தெற்கு நோக்கி செல்லுமாறு இஸ்ரேல் படை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. அவ்வாறு செய்யாமல் வருபவர்கள் சுடப்படுவார்கள் எனவும் மிரட்டி உள்ளது.
இதே போல, அல் குத்ஸ், அல் நசர் குழந்தைகள் மருத்துவமனை, அல் ரான்டிசி குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் கதவுகள் மூடப்பட்டு உள்நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்து வருகின்றன. இந்த மருத்துவமனைகளின் அடியில் ரகசிய சுரங்கம் அமைத்து ஹமாஸ் படையினர் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி வருகிறது. இதற்கான சில வீடியோ ஆதாரங்களையும் நேற்று வெளியிட்டது. இதனால் அங்கிருக்கும் நோயாளிகள் மருத்துவ பணியாளர்களை வெளியேற தொடர்ந்து எச்சரிக்கிறது. மருத்துவமனைகளுக்கு கீழ் ரகசிய சுரங்கம் எதுவும் அமைக்கப்படவில்லை என ஹமாசும், மருத்துவமனை நிர்வாகங்களும் தெரிவித்துள்ளன. உணவு, குடிநீர், மருந்து இல்லாமல் வடக்கு காசாவில் மக்கள் சிக்கியிருப்பதால் அவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
* காசாவிலிருந்து இந்திய பெண் மீட்பு
காசாவில் சிக்கிய காஷ்மீரை சேர்ந்த இந்திய பெண் லுப்ஜா நசிர் ஷாபூ அங்கிருந்து வெளியேற இந்திய தூதரகத்தின் உதவியை நாடியிருந்தார். இந்நிலையில் அவரும், அவரது மகள் கரிஷ்மாவும் நேற்று ரபா எல்லை வழியாக காசாவிலிருந்து பத்திரமாக வெளியேறி எகிப்தின் அல் அரிஷ் நகரை அடைந்துள்ளனர்.