‘
காசா மீது முழுகவனம் செலுத்தி வரும் இஸ்ரேலுக்கு அதன் இன்னொரு திசையிலிருந்து இம்சைகளை கூட்ட ஆரம்பித்திருக்கிறது லெபானானிலிருந்து தாக்குதல் தொடுக்கும் ஹிஸ்பொலா.
5வது வாரமாக தொடரும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல், அதன் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. வடக்கு காசாவை தரை மட்டமாக்கி, ஹமாஸ் போராளிகளின் பதுங்குதளங்கள், ஆயுத இருப்புகள், சுரங்கப் பாதைகள் ஆகியவற்றை நிர்மூலமாக்கி வருகிறது இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள்.
இவற்றில் முக்கியமாக ஹமாஸ் கமாண்டர்களை ஒவ்வொருவராக அடையாளம் கண்டு கொன்று வருகிறது. ஹமாஸ் போராளிகளை முழுதுமாக கொன்றொழித்து, அவர்கள் வசம் பிணைக்கைதிகளாக இருக்கும் 200க்கும் மேற்பட்டவர்களை விடுவித்த பிறகே இஸ்ரேல் பீரங்கிகள் பெருமூச்சு விடும்.
ஆனால் அதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பது போல, இஸ்ரேலின் இன்னொரு திசையில் புகைந்து வரும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது லெபனானின் ஹிஸ்பொலா அமைப்பு. இந்த ஹிஸ்பொலா உடன் அக்.8 முதலே கணிசமான பதிலடித் தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது.
ஆனால் முழு மூச்சான போர் இனிமேல்தான் இருக்கிறது என்று பிரகடனம் செய்திருக்கிறார் ஹிஸ்பொலாவின் தலைவர் சயீத் ஹசன் நஸ்ரல்லா. இவரது பின்னணியின் வீரியத்தை விளங்கிக்கொண்டால், இஸ்ரேலுக்கு இவர் எத்தனை அச்சுறுத்தலானவர் என்பது புரியும். மேலும் காசாவுடன் முடிய வேண்டிய இஸ்ரேலின் போரை பல நாடுகளின் இடையிலான மோதலாக வலுக்கச் செய்யும் சூத்ரதாரியாகவும் இவர் வளர்ந்து வருகிறார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக லெபனானின் ஹிஸ்பொலாவை இயக்கி வரும் ஹசன் நஸ்ரல்லா, லெபனான் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதனால் லெபனான் மக்கள், இஸ்ரேல் உடனான மோதலை விரும்பாதபோதும் ஹிஸ்பொலாவால் தொடர் இழப்புகளை சந்தித்து வருகிறார்கள்.
உதாரணத்துக்கு, 2005-ல் ஹிஸ்பொலா போராளிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து ஒரு இஸ்ரேலிய வீரரை கொன்று மேலும் இருவரை கடத்தி வந்தனர். பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 1200 அப்பாவி லெபனான் மக்கள் கொல்லப்பட்டனர். இப்போதும் இஸ்ரேலுக்கு எதிரான முழு மூச்சிலான தாக்குதலை ஹிஸ்பொலா தொடுத்தால், ஹமாஸ் போராளிகளுக்கான குறியில் காசாவில் கொல்லப்படும் அப்பாவி பாலஸ்தீனியர்கள் போன்றே லெபனானிலும் ரத்த ஆறு ஓடும்.
எனினும், இஸ்ரேலுக்கு எதிரான புதிய போர் தங்களுக்கு திணிக்கப்பட்டதாக ஹிஸ்பொலா குமுறுகிறது. இதற்கு முதல் காரணம் மத்திய சிரியாவில் வெடித்தது. இஸ்ரேலின் துல்லியத் தாக்குதல் காரணமாக 2 தினங்களுக்கு முன்னர் மத்திய சிரியாவில் செயல்படும் ஹிஸ்பொலா போராளிகள் 7 பேர் பலியானார்கள். அதற்கு பழிவாங்க ஹசன் நஸ்ரல்லா காத்திருக்கிறார்.
இரண்டாவதாக, இஸ்ரேலை கட்டுப்படுத்த வாய்ப்புள்ள அமெரிக்கா அதனை கண்டும்காணாது இருப்பதாக, பெரும்பாலான அரபு நாடுகளின் குரலை ஹிஸ்பொலா வலுவாக எதிரொலிக்கிறது. காசாவில் குடிகொண்டிருக்கும் இஸ்ரேலின் கவனத்தை திசை திருப்புவதன் மூலம், அங்கு பலியாகும் அப்பாவிகளின் எண்ணிக்கை குறைக்கவும், லெபனானுக்கு எதிராக இஸ்ரேல் திரும்புவதால் போரின் பரப்பு விரிவடைவதை அமெரிக்கா விரும்பாது எனவும் ஹிஸ்பொலா கணக்குப் போடுகிறது.
இவை அனைத்துமே ஹசன் நஸரல்லாவை இயக்கும் இரானின் தந்திரங்கள் என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை. இரானின் நிதியாதாரத்தால், லெபனானில் வலுவான ஹிஸ்பொலா அரசியல் அமைப்பையும், ஆயுதக் குழுக்களையும் கட்டமைத்திருக்கும் ஹசன், தெற்கு லெபனானில் பொதுமக்களுக்கான மருத்துவமனைகள், பள்ளிகளையும் ஏராளமாக உருவாக்கி இருக்கிறார்.
இந்த மக்களின் ஆதரவால், போராளிகள் குழு என்பதாக அல்லாது முழு லெபனான் தேசத்தையும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹிஸ்பொலாவால் திருப்ப முடியும். இஸ்ரேல் மட்டுமன்றி அமெரிக்காவும் இதனை ரசிக்காது. வேறுவழியின்றி காசாவில் இஸ்ரேலின் வெறித் தாக்குதல் வேகம் குறைய வாய்ப்பாகும்.
இந்த பின்னணியில், புதிய ரக ஆயுதங்களுடன் இஸ்ரேல் மீது முழுவீச்சிலான தாக்குதலுக்கு, லெபனான் ஹிஸ்பொலாவை ஹசன் நஸ்ரல்லா முடுக்கி விட்டிருக்கிறார். உக்ரைனை திணறடிக்க ரஷ்யாவுக்கு வழங்கப்பட்ட இரானின் ட்ரோன் ரகங்கள் ஏராளமாய் ஹிஸ்பொலா வசமிருக்கின்றன. மேலும் ராக்கெட் தாக்குதலில் 300 முதல் 500 கிலோ வெடிப்பொருட்களுடன் ஏவும் திறன் தங்களுக்கு வாய்த்திருப்பதாக ஹிஸ்பொலா கூறுகிறது. இஸ்ரேலின் ராணுவ நிலைகள், ஆயுத கிடங்குகள் உள்ளிட்டவற்றை அழிப்போம் என கர்ஜிக்கிறது.
ஆனால் இஸ்ரேலியர்களின் உயிருக்கும் இவை பாதிப்பை விளைவிக்கும் என்பதால், காசா எல்லைக்குள் சுருங்க வேண்டிய இஸ்ரேலின் போர் லெபனானுடனும், அதற்கு அடுத்த கட்டமாக ஹிஸ்பொலாவுக்கு ஆதரவளிக்கும் இரான் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராகவும் விரிவடையக் கூடும். அப்போது இஸ்ரேலுக்கு கடிவாளம் போடுவது அல்லது தானும் போரில் இறங்குவது என இரண்டே வாய்ப்புகள் அமெரிக்காவுக்கு எழும். இரண்டாவது வாய்ப்பு நிச்சயம் இன்னொரு உலகப்போருக்கு வித்திடவும் செய்யும். காசாவின் ஹமாஸ் என்ற தலைவலி தீர்வதற்கு முன்னரே, லெபனானில் இருந்து ஹிஸ்பொலா என்னும் திருகுவலி சேர்ந்திருக்கிறது!