நடுக்கடலில் மிதக்கும் மருத்துவமனைகள்.. பாலஸ்தீனர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இத்தாலி!
எகிப்தின் ராஃபா எல்லை வழியாக அடிப்படை வசதிகள் அனுப்புவது, மத்திய தரைக்கடலில் மிதக்கும் மருத்துவமனைகள் அமைப்பது எல்லாம் வலி நிவாரணி மட்டுமே. போரால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை குணப்படுத்துவதற்கு அமைதி ஒன்றே தீர்வாகும்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகிறது. ஹமாஸை ஒழிக்காமல் ஓயமாட்டோம் என்று சூளுரைத்த இஸ்ரேல், போர் நிறுத்தத்திற்கு செவி சாய்ப்பதாக இல்லை. இதன் உச்சமாக காசாவிற்குள் நுழைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கும் கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாக்குகிறது. இதில் காசாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளும் இஸ்ரேலின் குண்டுகளுக்கு இரையாகின.
இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில், 4 ஆயிரத்து 300 குழந்தைகள் உட்பட சுமார் 10 ஆயிரத்து 500 பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், காசாவில் உள்ள 16 மருத்துவமனைகள் குண்டு வீச்சில் சேதம் அடைந்துள்ளதால், மருத்துவ சேவையும் ஸ்தம்பித்துள்ளது. காசாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, எகிப்தின் ராஃபா எல்லை வழியாக அடிப்படை பொருட்கள் மட்டுமே உலக நாடுகளால் அனுப்பப்படுகிறது. இதனால், மருத்துவ தேவை சிறிதளவு கூட நிறைவேறவில்லை.
இந்நிலையில், காசாவில் இருந்து சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசியா, மத்திய தரைக்கடல் பகுதிக்கு மிதக்கும் கப்பல்களை அனுப்ப இருப்பதாக அறிவித்தது. 124 மீட்டர் நீளம் கொண்ட இந்தோனேசியாவின் இப்போர் கப்பலில், சுமார் 500 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். 3 ஹெலிகாப்டர்களுடன் 30 நாட்கள் கடலில் தாக்குப்பிடிக்கக்கூடிய இக்கப்பலில், 66 மருத்துவ பணியாளர்களை அனுப்பவும் இந்தோனேசியா ஆயத்தமாகி வருகிறது.
இதேபோன்று மத்திய தரைக்கடல் பகுதியில் நீண்ட எல்லையை பகிரும் இத்தாலியும் மிதக்கும் மருத்துவமனையை அமைக்க முடிவு செய்துள்ளது. அதாவது மருத்துவ வசதிகள் கொண்ட கப்பலை மத்திய தரைக்கடல் பகுதியில் நிலைநிறுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக இத்தாலியின் பாதுகாப்பு துறை அமைச்சர் குயிட்டோ குரோசிட்டோ அறிவித்துள்ளார்.
இத்தாலி அனுப்ப உள்ள வுல்கானோ என்ற இந்த கப்பலில் 30 மருத்துவர்கள் உட்பட 170 மருத்துவ பணியாளர்கள் செல்ல உள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மட்டுமன்றி அதிர்ச்சியில் உள்ளவர்களை மீட்பதற்கான வசதிகளும் இத்தாலி அனுப்ப உள்ள கப்பலில் இடம்பெற உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியா, இத்தாலியை தொடர்ந்து, பிரான்ஸில் நடைபெற்ற பாரிஸ் மாநாட்டிலும் மத்திய தரைக்கடல் பகுதியில், மிதக்கும் மருத்துவமனை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் எகிப்து, ஜோர்டான், அரபு வளைகுடா நாடுகள் மற்றும் ரஷ்யாவை தவிர்த்து ஜி20-ல் உறுப்பினராக உள்ள நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்றன. இதில், மத்திய தரைக்கடல் பகுதியில் மிதக்கும் மருத்துவமனை அமைக்க பிரான்ஸ் திட்டமிட்டு இருப்பதாக அந்நாட்டு பிரதிநிதிகள் கூறினர்.மாநாட்டில் பங்கேற்ற ஒரு சில நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எகிப்தின் ராஃபா எல்லை வழியாக அடிப்படை வசதிகள் அனுப்புவது, மத்திய தரைக்கடலில் மிதக்கும் மருத்துவமனைகள் அமைப்பது எல்லாம் வலி நிவாரணி மட்டுமே. போரால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை குணப்படுத்துவதற்கு அமைதி ஒன்றே தீர்வாகும்.