காசாவை ஆளும் எண்ணம் இல்லை - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்!
10 Nov,2023
.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச ஊடகங்களிடம் பேசியபோது, காசாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காசாவில் தினந்தோறும் நான்கு மணி நேரம் தாக்குதல் நிறுத்தத்தை பிரதமர் அறிவித்ததாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பேசிய நெதன்யாகு, இஸ்ரேலிய ராணுவம் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்றும் பாலஸ்தீனத்தை மீண்டும் கைப்பற்றும் திட்டம் இஸ்ரேலிடம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
.
மேலும், "போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் சரணடைவதற்கு ஒப்பானது. ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கான நேர அட்டவணை கிடையாது. இஸ்ரேல் ராணுவம் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. எவ்வளவு நாள் எடுக்குமோ அதுவரை நாங்கள் போரிடுவோம். காசாவை ஆளும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை. நாங்கள் ஆக்கிரமிக்கவும் முயற்சிக்கவில்லை, காசாவுக்கும் எங்களுக்கும் சிறந்த எதிர்காலம் அமைக்கவே எதிர்பார்க்கிறோம். காசாவில் மக்கள் அரசை வரவேற்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், போரின் வெற்றிக்குப் பிறகு எப்போதும் காசாவுக்குள் நுழைய இஸ்ரேல் படை தயாராக இருக்கும் என்றும் அதுவே ஹமாஸ் போன்ற குழு மீண்டும் உருவாவதைத் தடுக்கும் எனவும் நெதன்யாகு குறிப்பிடுள்ளார்.
.
ஹமாஸ் பயங்கரவாத குழுவை அடியோடு ஒழிக்கும் முயற்சியில் உள்ள இஸ்ரேல் காசாவில் நடத்திய வான் வழி மற்றும் தரைவழி தாக்குதலில் 10,800 பாலஸ்தீனர்கள் இதுவரை பலியாகியுள்ளதாக காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது.