இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில், இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இஸ்ரேலின் வலதுசாரிக் கட்சி உறுப்பினரும் இஸ்ரேலிய அமைச்சருமான அமிச்சாய் எலியாஹு, ஹமாஸுக்கு எதிராக 'காஸா பகுதியில் அணு ஆயுதங்களைப் பிரயோகிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
எலியாஹு, இஸ்ரேல் அரசின் பாரம்பரியத் துறை அமைச்சர். அவர் ஓட்ஸ்மா யெஹூதித் (யூத அதிகாரம்) எனும் கட்சியின் தலைவரும் ஆவார்.
இவரது இந்தக் கருத்துக்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுதக் கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (ஐ.ஏ.இ.ஏ.) தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளன. சிரியா, லெபனான், சௌதி அரேபியா போன்ற நாடுகள் இந்த அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளன.
மறுபுறம், இஸ்ரேலிய அரசாங்கம் எலியாஹுவை அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்குத் தடை விதித்துள்ளது. அவரது அறிக்கையில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டுள்ளது.
இஸ்ரேலிய அமைச்சர் என்ன சொன்னார்?
"பாலத்தீன பயங்கரவாதக் குழுவான ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரில் 'ஒரு வழியாக' காஸா பகுதியில் அணுகுண்டு வீசப்பட வேண்டும்" என்று இஸ்ரேலிய அமைச்சர் எலியாஹு கூறியிருந்தார்.
இந்த அறிக்கை வெளியான பிறகு, இஸ்ரேலிய அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பதில் இருந்து எலியாஹு காலவரையின்றி தடை செய்யப்பட்டுள்ளார்.
செய்தி நிறுவனங்களின்படி, ஒரு வானொலி நேர்காணலில், இஸ்ரேலிய அமைச்சர் எலியாஹுவிடம், காஸா பகுதியில் ‘அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவது ஒரு வழிமுறையாக இருக்கலாமா?’ என்று கேட்கப்பட்டது.
அதற்கு எலியாஹு, ‘ஆம், அதுவும் ஒரு வழி’ என்றார்.
இஸ்ரேல் அரசின் நிலைப்பாடு
இஸ்ரேல், காஸா, ஹமாஸ், அரபு நாடுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES
இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் என இரு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வரத் தொடங்கின. அவரை அரசில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழ ஆரம்பித்தன.
இந்த அறிக்கையை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோரும் விமர்சித்திருக்கின்றனர்.
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், அமைச்சர் எலியாஹு, போர்க்காலத்தில் முடிவுகளை எடுக்கும் பாதுகாப்பு அமைச்சரவையில் இல்லை, என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், “ஹமாஸுக்கு எதிரான போரில் அறிவுரைகளை வழங்கும் அமைச்சரவையில்கூட அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை," என்று தெரிவித்திருக்கிறது.
பிரதமர் நெதன்யாகு, இந்த அறிக்கை எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது என்று கூறியிருக்கிறார்.
பின்வாங்கிய அமைச்சர்
எனினும், சர்ச்சை வலுத்ததால், அமைச்சர் எலியாஹு தனது கருத்தில் இருந்து பின்வாங்கினார். அவர் அந்தக் கருத்தை ஓர் 'உருவகமாக' சொன்னதாக விளக்கமளித்தார்.
அவர் மேலும், “அணுசக்தி பற்றிப் பேசியது ஓர் உருவகம் என்பதை புத்தியுள்ள எவரும் புரிந்துகொள்ள முடியும். பயங்கரவாதம் சரியான பாதையல்ல என்பதை ‘நாஜி’க்களும் அவர்களின் ஆதரவாளர்களும் அறியும் வகையில் நாம் அதை வலிமையாக எதிர்க்க வேண்டும். ஜனநாயக நாடுகள் பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கான ஒரே சூத்திரம் இதுதான்," என்றார்.
'இஸ்ரேலின் அணுசக்தி திட்டம் அம்பலப்படுத்தப்பட வேண்டும்'
இருப்பினும் பெரும்பாலான அரபு நாடுகள் இஸ்ரேலிய அரசாங்கத்தின் விளக்கத்தையும் அமைச்சர் எலியாஹுவின் விளக்கத்தையும் பொருட்படுத்தவில்லை. அவை இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இஸ்ரேலிய அமைச்சரின் இந்தக் கூற்றை 'வன்மையாகக் கண்டிப்பதாக' சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிரியாவின் அரசாங்கச் செய்தி நிறுவனமான ‘சனா’வின் கூற்றுப்படி, இது 'இஸ்ரேலிய அரசாங்கத்துடைய பயங்கரவாதத்தின் ஆதாரம்' மற்றும் 'இனவாதத்தின் உச்சம்' என்று அரசு விமர்சித்துள்ளது.
இஸ்ரேலை தொடர்ந்து தாக்கி வரும் சிரியா, காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கடுமையாக விமர்சித்து வருகிறது.
தன்னிடம் அணு ஆயுதங்கள் இருக்கும் உண்மையை இஸ்ரேல் மறைக்கிறது என்பதை இந்த அறிக்கைகள் உறுதிப்படுத்துவதாக, சிரியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சிரிய செய்தி நிறுவனமான ‘சனா’விடம் கூறினார்.
“சர்வதேசக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு வெளியே இந்த ஆயுதங்கள் இஸ்ரேலிடம் உள்ளன. அமெரிக்க நிர்வாகம் மற்றும் மேற்குலகின் காலனித்துவ நாடுகளில் உள்ள அதன் கூட்டாளிகளிடமிருந்து இஸ்ரேல் இவற்றைப் பெற்றுள்ளது,” என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “[இஸ்ரேலிய அமைச்சரின்] இந்த அறிக்கை பிரதேசத்தின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் இங்குள்ள மக்களின் வாழ்க்கைக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன,” என்றார்.
'இஸ்ரேலின் அணுசக்தித் திட்டத்தை அம்பலப்படுத்துவதற்கும், அதன் கட்டுக்கடங்காத ஆட்சியை ஒரு பாதுகாப்புச் செயல்முறையின் கீழ் கொண்டு வருவதற்கும் சர்வதேச சமூகமும், சர்வதேச அணுசக்தி முகமையும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்’ என சிரியாவின் வெளியுறவு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நவம்பர் 2ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இஸ்ரேல் காஸா பகுதியில் 25 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்களை வீசியுள்ளது.
‘இரண்டு அணுகுண்டுகளுக்கு சமமான வெடிபொருட்கள் வீசப்பட்டன’
எலியாஹுவின் அறிக்கை அரபு உலகம் முழுவதும் எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த அறிக்கை லெபனானின் ஹெஸ்புலா குழுவின் அல் மனார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து லெபனானின் அல் மயாதீன் தொலைக்காட்சியும் செய்தி வெளியிட்டுள்ளது.
லெபனானின் ஹெஸ்புலா குழுவும் இஸ்ரேல் ராணுவமும் அண்மைக்காலமாக மோதி வருகின்றன. இரான் ஹெஸ்புலாவுக்கு ஆதரவாக இருப்பதாக நம்பப்படுகிறது.
அந்தச் செய்தி அறிக்கை, ‘இஸ்ரேலிய அமைச்சர் எலியாஹுவின் கூற்று ஆக்கிரமிப்பாளர்களின் (இஸ்ரேலின்) முன்னெப்போதும் இல்லாத பயங்கரவாத நடவடிக்கையை வெளிப்படுத்துகிறது. இது முழு பிராந்தியத்திற்கும் முழு உலகிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது,” என்று கூறியது.
இஸ்ரேலிய அமைச்சரின் கூற்றுக்கு எதிராக பாலத்தீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை பற்றிய தகவலையும் அந்தச் செய்தியறிக்கை கூறுகிறது. இஸ்ரேலிய அமைச்சர் கூறியதை வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளதாகவும், இது காட்டுமிராண்டித்தனமான இனவாத அறிக்கை என்றும் அந்த அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய மத்தியதரை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள தரவுகள் குறித்த தகவலையும் அல் மயாதீன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
நவம்பர் 2ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இஸ்ரேல் காஸா பகுதியில் 25 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான வெடிபொருட்களை வீசியுள்ளது, இது இரண்டு அணுகுண்டுகளுக்குச் சமம்.
சமீபத்திய வாரங்களில், மூத்த லெபனான் தலைவர்கள், இஸ்ரேலின் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளிடம் தங்கள் ‘ஆக்கிரமிப்பு சார்ந்த தீவிரமான மொழியை’ கட்டுப்படுத்துமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சௌதி அரேபியா என்ன சொன்னது?
இஸ்ரேல் அமைச்சர் எலியாஹுவின் கருத்துக்கு சௌதி அரேபியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. சௌதி அரேபியாவுக்கு சொந்தமான அல் அரேபியா தொலைக்காட்சியில் இந்த அறிக்கை வெளியானது.
சௌதியின் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் நாளிதழ், “இஸ்ரேல் அரசில் தீவிரவாதம் மற்றும் காட்டுமிராண்டித்தனம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அமைச்சரின் அறிக்கை காட்டுகிறது,” என்று தெரிவித்திருந்தது.
அந்தச் செய்தி அறிக்கையின்படி, சௌதி வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையில், “எலியாஹு இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளார். அவர் பணிநீக்கம் செய்யப்படவில்லை. மனிதநேயம், ஒழுக்கம் மற்றும் சட்டம் ஆகிய அனைத்து விழுமியங்களுக்கும் இஸ்ரேல் அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது,” என்று கூறப்பட்டிருந்தது.
.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட தனது அறிக்கையில் "பாலத்தீனத்திற்கு எதிராக அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்திருக்கும் இஸ்ரேலிய அமைச்சரின் அறிக்கை எங்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது," என்று கூறியுள்ளார்.
மேலும், "இது இனப்படுகொலைக்கான நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது. பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து உலகிற்கு இந்த அறிக்கை ஒரு எச்சரிக்கையாகும்," என்று கூறியிருக்கிறார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் (OIC) இஸ்ரேலிய அமைச்சரின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காஸா பகுதியில் அணுகுண்டு வீசுவது குறித்து இஸ்ரேலின் கலாசார அமைச்சர் அமிச்சாய் எலியாஹுவின் இனப் பாகுபாடான கருத்துகளை விமர்சிப்பதாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு இந்த வெறுக்கத்தக்க பேச்சை பயங்கரவாத இனவெறி சித்தாந்தத்தின் நீட்டிப்பாகப் பார்க்கிறது. சர்வதேச சமூகம் இதைக் கண்டிக்க வேண்டும்," என்று அந்த அமைப்பு எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டிருந்தது. மேலும் இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் இனப்படுகொலைகளைத் தடுக்க உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இரான் என்ன சொன்னது?
இஸ்ரேல் அமைச்சரின் இந்தக் கருத்தை இரானிய அதிகாரிகள், ஊடகங்கள், மற்றும் சமூக ஊடகங்கள் கடுமையாக விமர்த்திருக்கின்றன. இந்தச் செய்தியை இரானிய நாளிதழ்கள் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன.
இரானின் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் இஸ்ரேல் தனது அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர், தனது எக்ஸ் பக்கத்தில், "இஸ்ரேலிய அமைச்சரின் அணுகுண்டு அச்சுறுத்தல் இஸ்ரேல் உண்மையில் தோற்கடிக்கப்பட்டதற்கான ஆதாரம். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலும் சர்வதேச அணுசக்தி முகமையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இஸ்ரேலை நிராயுதபாணியாக்க வேண்டும்," என்று கூறியிருக்கிறார்.
இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானியும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அமைச்சரின் இந்த அறிக்கை முழு உலகிற்கும் ஒரு எச்சரிக்கை என்று அவர் கூறியுள்ளார்.
திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இந்த அறிக்கையை விமர்சித்த கனானி, "சர்வதேச சமூகம் இந்த அச்சுறுத்தலை அறிந்துகொள்ள வேண்டும், ஏனெனில் இது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திற்குச் சவால் விடுகிறது," என்றார்.
இரானிய பத்திரிகைகளும் இதைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
இரானிய நாளிதழ் ‘ஜவான்’ தனது முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸாவில் தங்களுடைய குடிமக்கள் பணயக் கைதிகளாக இருப்பதால் மட்டுமே, காஸா மக்களைப் பற்றி கவலைப்படாத இஸ்ரேலிய அதிகாரிகள் அமைச்சரின் அறிக்கையை மறுக்கிறார்கள் என்று செய்தித்தாள் எழுதியுள்ளது.
மறுபுறம், கத்தாரும் இந்த விஷயத்தில் கடுமையான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது மனிதநேய, தார்மீக விழுமியங்கள் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறும் போர்க் குற்றப்போக்கு என்று கத்தார் கூறியுள்ளது.
இந்தக் கருத்தைத் தெரிவித்த அமைச்சரை இடைநீக்கம் செய்ததன் மூலம், இஸ்ரேல் அவரிடம் மென்மையான அணுகுமுறையைk கடைப்பிடித்துள்ளதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.